சிறுகதை

தவறான எண்ணம் – மு.வெ.சம்பத்

செல்வம், மணி இருவரும் எதிர் வீட்டுக்காரர்கள்.

இவர்களது மனைவிகள் இருவரும் கல்லூரித் தோழிகள் என்பதால் இவர்களது நட்பு ஆழமாகப் பதிந்தது.

செல்வம் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்பவர். மணி காலையில் வேலைக்குச் சென்றால் இரவு எட்டு மணிக்குத் தான் வீடு திரும்புவார். ஒரு தனியாரிடம் மணி வேலை செய்வதால் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வர நேரமாகி விடுகிறது. ஞாயிறு ஒரு நாள் தான் விடுமுறை. அன்று மாலை செல்வம் மற்றும் மணி குடும்பத்தினர் ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இருவரும் வீட்டிற்குப் பணம் கொடுப்பதோடு சரி. மற்றபடி எல்லாவற்றையும் இவர்கள் மனைவிமார்கள் தான் கவனித்துக் கொள்கின்றனர். வர வர வீட்டில் தேவைகள் அதிகரித்துக் கொண்டு போனதைக் கண்டு செல்வமும் மணியும் பணப்பற்றாக் குறையில் தவித்தனர்.

செல்வம் தான் சென்ற ஊரில் ஒரு வீட்டில் பனை ஓலையில் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பதைக் கண்டு, அவர்களிடம் எங்கள் ஊரில் ஒரு கடை போட்டு உங்கள் தயாரிப்புகளை விற்கத் தருவீர்களா என்றதும் அவர்கள் நீங்கள் தான் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்; எந்த மாதிரி நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்த மாதிரித் தயார் செய்து தருவோம் என்றனர்.

தயவு செய்து லாப நோக்கில் அதிக விலை வைத்து விற்காதீர்கள் ஏனென்றால் இது குடிசைத் தொழில் வியாபாரம். நம் நாட்டுப் பொருட்களை நம் மக்கள் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்கள். உடனே செல்வம் நான் ஒரே நாளில் பணக்காரனாகி விடும் எண்ணமில்லாதவன். பக்குவமாக உபயோகிக்கும் ஊரும் கிணறு போல் நிறைய நாள் நிலைத்திருக்க விரும்புகிறேன் என்றார்.

வீட்டிற்கு வந்த செல்வம் தனது மனைவி மற்றும் மணியின் மனைவி இருவரிடமும் அலங்காரப் பொருட்கள் பற்றி பேசியதும் நாங்கள் தரும் வடிவமைப்பில் செய்து தரச் சொல்லுங்கள். அந்தப் பொருட்களை நாங்கள் வர்ணம் பூசியோ அல்லது அலங்காரத் துணி கொண்டு தைத்தோ அவைகளை மேம்படுத்தி விற்பனைக்குத் தயாராக்கித் தருகிறோம் என்றனர். நம் வீட்டு வாசலில் உள்ள அறையை இதற்கென ஒதுக்கி பொருட்களைக் காட்சிப்படுத்தி வைப்போம். வேண்டுமென்று வருபவர்களுக்கு அவர்கள் விரும்பும்படி தயார் செய்தும் தரலாம் என்று மனைவிமார்கள் பச்சைக் கொடி காட்டியதும் செல்வம் மேற்கொண்டு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். சில நாட்களில் வியாபாரம் சூடு பிடித்து விட, செல்வம் மற்றும் மணி வீட்டில் பணப் பற்றாக்குறைபாடு தீர ஆரம்பித்தது.

இதற்கிடையில் மணியும் தன் பங்கிற்கு அலங்காரப் பொருட்களை தனது முதலாளி மனைவியிடம் காண்பிக்க, அவர்கள் மிகவும் அழகாக உள்ளதே, நான் கேட்கும் அளவிற்கு உங்களால் தர முடியுமா என்று வார்த்தைகளை உதிர்க்க, மணி சரியென்று ஒப்புக் கொண்டார். சில நாட்களில் முதலாளி மனைவி மூலமாக நிறைய ஆர்டர்கள் கிடைக்கப் பெற்றன.

அன்று முதலாளி மனைவி ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு தனது மனைவியுடன் சென்ற மணி, தங்களது அலங்காரப் பொருட்கள் நேர்த்தியாகப் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்தனர். எல்லோரிடமும் முதலாளியின் மனைவி மணியின் மனைவியை அறிமுகம் செய்து வைத்தார்கள். இவர்களது தயாரிப்பே இந்த அலங்காரப் பொருட்கள் என்றதும் மணியின் மனைவி அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

மறுநாள் மணியை அழைத்த முதலாளி மனைவி மணியிடம் உனது மனைவியிடம் நெக்லெஸ் கிடையாதா என்று கேட்க மணி சிறிது நேரம் பதில் சொல்ல யோசிக்க, உடனே முதலாளி மனைவி அவரிடம் ஒரு கவரைத் தந்து இதை வைத்து உன் மனைவிக்கு ஒரு நெக்லெஸ் வாங்கிப் போட்டு அழகு பார் என்றதும் மணி சற்று தயங்க, வலுக்கட்டாயமாக கவரைக் கையில் திணித்தார்.

வீடு வந்து அந்தக் கவரை மனைவியிடம் தந்தான் மணி. உடனே அவர் மனைவி எண்ணி விட்டு ஒரு லட்சம் இருப்பதாகக் கூற, திகைத்த மணி எவ்வாறேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இதை திருப்பி விடவேண்டுமென மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு செல்வம் வர, நடந்தவைகளை மணி அவரிடம் கூறி விட்டு அந்தக் கவரை ஜன்னல் பக்கமுள்ள மேஜையின் மேல் வைத்தார்.

செல்வம் தனது மகன் திருமண வேலையில் மும்முரமாகி நேரத்தை விலை பேசும் நிலைக்குத் தள்ளப் பட்டார். அன்று மணி வீட்டிற்கு வந்த செல்வம் மணியிடம் எனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. திருமணம் முடிந்ததும் திருப்பித் தருகிறேன் என்றதும் மணியின் மனைவி சற்றும் யோசிக்காமல் அந்த மேஜை மேல் இருந்த கவரை எடுத்துக் கொடுத்தார்.

திருமணம் முடிந்ததும் செல்வம் மணியை அழைத்து வாயிலில் நிற்கும் அந்த மனிதரைப் பார் என்று காட்டி விட்டு, இவர் இரண்டு நாளாகவே நமது தெருவில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார். நான் பார்க்கும் போது உன் வீட்டு ஜன்னலில் அவர் பார்வை சென்றதைக் கண்டு நான் அந்தப் பணத்தைக் காப்பாத்த பணத்தேவை எனச் சொல்லி உங்களிடம் வாங்கி வந்து விட்டேன். நீங்களும் அந்தக் கவரை மேஜையிலேயே வைத்திருந்தீர்கள். இந்தாருங்கள் என்று பெருமையாக மணியிடம் நீட்டினார்.

அப்பொழுது அந்த மனிதர் வேகமாக இவர்களை நோக்கி வருவது கண்டு திகைத்து நிற்க, அவர் செல்வத்தின் தம்பி காவல் துறை இன்ஸ்பெக்டர் ரமணியைப் பார்த்து ஐயா வணக்கம். நீங்கள் சொன்ன கம்பெனியில் தான் வேலை செய்கிறேன். மனதாலும் திருட்டுத் தனத்தை நினைக்க மாட்டேன் என்ற சத்தியத்தைக் காப்பாற்றி வருகிறேன் என்றார். ஆனாலும் கம்பெனியில் என் காது படவே இவன் திருடன் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறுகின்றனர் என்றார். ஆதலால் வேறு வேலை பார்த்துத் தாருங்கள். இரண்டு நாட்களாக இந்தத் தெருவில் உங்களுக்குக்காகவே தான் காத்திருக்கிறேன் என்று கூற, ரமணி சரி நாளை வீட்டில் வந்து பாரெனக் கூற, வணக்கம் செலுத்தி விட்டு அந்த மனிதர் நகர, தனது தவறான எண்ணத்தை எண்ணி செல்வம் தலை குனிந்தான்.

மணி கையில் இருந்த கவருடன் செல்வத்தைப் பார்த்து பெரு மூச்சு விட்டார். அந்த மனிதர் இதயம் மற்றும் மக்கள் திருந்த மருந்து சொல்லடா என்ற வரிகளை முணுமுணுத்ததை கேட்ட மணி அதை செல்வத்துடன் பகிர்ந்து கொண்டார்.

செல்வம் மற்றும் மணி ஒரு சேர காண்பதெல்லாம் மெய்யாக இருக்காதெனக் கூறி நகர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.