செய்திகள்

தவறாக முடி திருத்தம் செய்த சலூன்: ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு

டெல்லி, செப். 25–

தவறாக முடி திருத்தம் செய்த சலூன், ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று , தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்,உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியானா மாநிலம், குருகிராம் நகரத்தைச் சேர்ந்தவர் 45 வயது ஆஷ்னா ராய். மாடலான இவர் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் நடித்து வருகிறார். இவர் இந்திய அளவில் பிரபலமான பேன்டீன் ஷாம்பூ மற்றும் விஎல்சிசி அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி டெல்லியிலுள்ள ஹோட்டல் ஐடிசி மவுரியா சலூனுக்கு சிகை அலங்காரம் செய்து கொள்வதற்காகச் சென்றிருக்கிறார்.

அங்கு, வழக்கமாக ஆஷ்னாவுக்கு சிகை அலங்காரம் செய்யும் சலூன் ஊழியர் விடுமுறையில் இருந்ததால், மாற்று ஊழியர் ஒருவரை சிகை அலங்காரம் செய்ய நியமித்திருக்கிறார். அப்போது, ஆஷ்னா வேறு யாரும் வேண்டாம் என்று மறுத்தபோது, மேனேஜர், ‘இந்த ஊழியரும் கைதேர்ந்தவர்தான். சிறப்பாக சிகை திருத்தம் மற்றும் அலங்காரம் செய்வார்’ என்று கூறி அவரை அமர வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சலூன் ஊழியர், ஆஷ்னா கேட்டுக்கொண்ட ஸ்டைலில் சிகை திருத்தம் செய்யாமல், தோள்பட்டை வரை தலைமுடியை முழுவதுமாக வெட்டி அவரின் முக அழகைப் பாழ்படுத்தியதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக சலூன் ஊழியர்கள் மற்றும் மேனேஜரிடம் கேட்ட போது, தெரியாமல் நடந்துவிட்டதாக மன்னிப்பு கேட்டிருக்கின்றனர். அதற்குப் பின்னர், ஆஷ்னாவின் வேண்டுகோளை ஏற்று ஐடிசி சலூன் நிர்வாகம் மீண்டும் பிரத்யேக தலைமுடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

விளம்பரம் நடிக்க முடியவில்லை

ஆனால், அந்த நேரத்தில் ஐடிசி சலூன் நிபுணர்கள் ஆஷ்னாவுக்கு அளித்த தலைமுடி சிகிச்சையில் அவரது தலைமுடி பயங்கரமாகச் சேதமடைந்து, அவருக்கு அதிக எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஆஷ்னாவால் விளம்பரங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு, அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

அதையடுத்து, ஆஷ்னா தனக்குத் தவறான சிகிச்சை அளித்த ஐடிசி சலூன் நிர்வாகத்திடம் இழப்பீடு கேட்டு டெல்லியிலுள்ள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆஷ்னாவின் வழக்கு கடந்த 21ஆம் தேதி குறைதீர்ப்பு ஆணையத்தில் நீதிபதி ஆர்.கே.அக்ரவால் மற்றும் ஆணைய உறுப்பினர் எஸ்.எம்.கண்டிகர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அக்ரவால் இருதரப்பு வாதங்களைக் கேட்டு தீர்ப்பு வழங்கினார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் சரத்துகளின்படி, மனுதாரரான ஆஷ்னா ராய்க்கு சலூன் ஊழியர்கள் தவறாக சிகிச்சை அளித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், ‘மோசமான வாடிக்கையாளர் சேவை’ என்பதின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்த ஆஷ்னா ராய்க்கு ஐடிசி ஹோட்டல் நிர்வாகம் ரூபாய் 2 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறி, அந்நிறுவனத்தின் தலைவர் யோகேஷ் சந்தர் தேவேஸ்வரை எதிர் மனுதாரராகக் குறிப்பிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *