செய்திகள் போஸ்டர் செய்தி

தளர்வுகள் இன்றி நாளை முழு ஊரடங்கு

தமிழகத்தில் 7–ம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கியது

தளர்வுகள் இன்றி நாளை முழு ஊரடங்கு

சென்னை, ஆக. 1–

தமிழகம் முழுவதும் நாளை எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமுலில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட் 6ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று முதல் 7ம் கட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 வரை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (4 வாரமாக) தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இதேபோல ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் (2, 9, 16, 23, 30 தேதிகள்) தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

அதாவது இன்று (1–ந்தேதி) நள்ளிரவு 12 மணி முதல் 3–ந்தேதி காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை வாகனங்கள், அவசர ஊர்திகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து, கொரோனா பரவலை தடுக்க அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

7ம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கியதையடுத்து,

சென்னையில் நேற்று வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்ட தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று முதல் 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட துவங்கின.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *