செய்திகள் போஸ்டர் செய்தி

தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்ட வழக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஈரான் பிடிவாரண்ட்

தெக்ரான், ஜூன் 30-

தமது நாட்டு பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக, ஈரான் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் பயங்கரவாத தாக்குதல் வழக்குகள், ஈரானில் பதிய செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து, அவருக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ஈரான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, ட்ரம்ப் உள்ளிட்டோர் தப்பித்து செல்லாமல் இருக்க, ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஈரான் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

அதேசமயம், ட்ரம்ப்பை தவிர, வேறு யாருக்கு எதிராக எல்லாம் பிடிவாரண்ட் உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈரான் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ட்ரம்ப்பின் அதிபர் பதவிக் காலம் முடிந்த பிறகும் இந்த வழக்கில் அவர் மீதான விசாரணை தொடரும் என்பதை மட்டும் ஈரான் அரசு தரப்பு வழக்கறிஞர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், ட்ரம்புக்கு எதிராக, ஈரான் அரசு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்பட்டோர் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இது, தேர்தலில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ட்ரம்புக்கு எதிராக, ஈரான் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் நேரத்தில் அவருக்கு கூடுதல் நெருக்கடியை தரும்படி அமைந்துள்ளது.

ட்ரம்புக்கு எதிராக ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, இன்டர்போல் அமைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒரு நபருக்கு எதிராக ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அவர் சர்வதேச பயணம் மேற்கொள்ள முடியாதபடி, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *