முழு தகவல்

‘தல’ தோனி: வெற்றித் தலைவன்!

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி அப்போதைய பீகார் மாநிலம், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ந்தேதி பிறந்தார். தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர்.

கிரிக்கெட்டுக்கு நகர்வு

தோனி ஜார்கண்ட் ராஞ்சியில் உள்ள ஷியாமளி டிஏவி ஜவஹர் வித்யாலயா மந்திரில் படித்தார். அங்கு அவர் துவக்கத்தில் இறகுப்பந்தாட்டம் மற்றும் கால்பந்தில் சிறந்து விளங்கியதோடு, மாவட்ட மற்றும் கிளப் அளவிலான ஆட்டங்களுக்கு தேர்வுபெற்றார். பின்னர், உள்ளூர் கிரிக்கெட் அணியில் விளையாடும்படி அவரது கால்பந்து பயிற்சியாளரால் அனுப்பி வைக்கப்பட்டார். அதில் அவர் விளையாடியது இல்லை என்றாலும், தோனி தனது விக்கெட்-கீப்பிங் திறமைகளால் பாராட்டப்பெற்று கமாண்டோ கிரிக்கெட் கிளப்பில் தொடர்ந்து விக்கெட் கீப்பராக விளையாடக் கூடியவரானார் (1995 – 1998).

இந்த கிளப் கிரிக்கெட்டில் அவரது செயல்திறனின் அடிப்படையில் பதினாறு வயதிக்குட்பட்டோருக்கான வினு மான்கட் டிராபி சாம்பியன்ஷிப் 1997/98 சீசனில் விளையாட எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் அவர் நன்றாக விளையாடினார். இதனைத்தொடர்ந்து தோனி தனது 10ஆம் வகுப்பிற்குப் பின்னர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இவருக்கு பிடித்தமான திரைப்பட நடிகர் எனில் ஜான் ஆப்ரஹாம். இதனாலேயே தோனியும் அவரைப்போலவே தனக்கிருந்த நீளமான முடியை வெட்டிக்கொண்டிருக்கிறார். கிரிக்கெட்டில் தோனி, ஆடம் கில்கிறிஸ்ட் ரசிகராவார். சிறுவயது முன் மாதிரி எனில் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், திரைத்துறையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோராவர். தனது நண்பர்களால் ‘மாகி’ என்று குறிப்பிடப்படும் தோனி, 1998/99ஆம் ஆண்டு பீகார் கிரிக்கெட் அணியில் விளையாடத் தொடங்கினார், 2004ஆம் ஆண்டில் கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய-ஏ அணியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 350 ஒருநாள் போட்டிகள், 10,773 ரன்கள், 10 சதங்கள், 73 அரை சதங்கள் என ஒரு சாதனை வரலாற்றை எழுதி முடித்துவிட்டு, கடந்த 15 ந்தேதி தனது ஓய்வு அறிவிப்பையும் யாரும் எதிர்பாரத நிலையில் வெளியிட்டு அதிரடி காட்டினார். பிறர் எதிர்பார்ப்பதை எதிர்பாராத நிலையில் செய்வதுதானே விளையாட்டில் தோனியின் இயல்பு. இனி அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்களை காண முடியாதே என்பதுதான் தல தோனியின் ரசிகர்கள் அனைவரின் ஒட்டுமொத்த ஏக்கம் என்றால் மிகையில்லை.

மனைவியும் மகளும்…

வெற்றி மேல் வெற்றியைக் குவித்த தோனி 2010-ம் ஆண்டு ஜுலை 4-ம் தேதி ஷாக்சியை மணமுடித்தார். இந்த தம்பதிக்கு ZIVA என்ற மகள் உள்ளார். 2015 உலகக்கோப்பை தொடரின் போது இவர் பிறந்தார். தான் நாட்டுக்கான பணியில் உள்ளதாகவும், அதனை முடித்துக்கொண்டே மகளை காண செல்வேன் எனவும் கூறிய தோனியின் கடமை உணர்வை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தோனிக்கு பிடித்த உணவு சிக்கன்.

திருமணத்திற்கு பிறகு அவர் கலந்துகொண்ட பெரும்பாலான போட்டிகளின் போது சிக்கன் சமைத்துத் தருவதற்காக எலக்ட்ரிக் குக்கருடன் கிளம்பிவிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார் மனைவி ஷாக்சி. சிக்கனைவிட தோனிக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றால் அது பைக். விதவிதமான பைக்குகளில் உலா வருவது என்றால் அவருக்கு கொள்ளை பிரியம்.

அசராத கிரிக்கெட் வீரர்

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இன, மொழி, எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டவர். நளினமான பேட்ஸ்மேன் மட்டுமே இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக இருக்க முடியுமென்கிற விதியை உடைத்தவர். எந்த இலக்கணத்துக்கும் உட்படாத அதிரடிகளால் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர். எதிரணிகளின் திட்டங்களைத் தவிடுபொடி ஆக்கியவர். மிக நெருக்கடியான தருணங்களிலும் அசராதவர். எந்தச் சூழ்நிலையிலும் தன் புன்னகையைத் தொலைத்துவிடாதவர். அவர்தான் தோனி.

எந்தவொரு இலக்கணத்துக்கும் கட்டுப்படாமல் இருந்த தோனியின் அதிரடி பேட்டிங் ரசிகர்களைக் கட்டிப்போட்டது. தோனியைத் தொழில்நுட்ப ரீதியாக சச்சின், திராவிட் போன்றவர்களுடன் ஒப்பிட்டுக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் தனக்கென ஒரு ஸ்டைலை அவர் உருவாக்கிக்கொண்டார். அது என்ன ஸ்டைல்? தன்னை நோக்கி வீசப்படும் எல்லாப் பந்துகளிலும் ரன் குவிக்க முடியுமா என்று பார்ப்பதுதான் அந்த ஸ்டைல். கால்களை உபயோகப்படுத்தாமலே நினைத்த வாக்கில் பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பும் நுட்பத்தை தோனி அறிந்திருந்தார். அதற்கேற்ற தடந்தோள்களும் இரும்புக்கைகளும் தோனிக்கு வாய்த்திருந்தன. ஐந்து, ஆறாம் நிலைகளில் களமிறங்கிய தோனி மிதவேக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்.

தோனி வழி தனி வழி

பொதுவாகக் கிரிக்கெட் உலகில் இரண்டு வகையான கேப்டன்கள்தான். தன்னுடைய ஆளுமையின் மூலம் அணியை முன்னகர்த்திச் செல்வது; மற்றொன்று வீரர்களை அவர்களுடைய போக்கில் விட்டு வேலை வாங்குவது. ஆனால் தோனி இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வழிமுறையைக் கையிலெடுத்தார். தோனி தன்னுடைய ஆட்டத்தின் மூலம் முன்னுதாரணமாக திகழ்ந்ததோடு மட்டுமில்லாமால் அணி வீரர்களை அவர்களுடைய இயல்பில் இருக்க அனுமதித்தார். கேப்டன்சியில் மைக் பியர்லி போல தனக்கென ஒரு வெற்றிகரமான மாடலை தோனி உருவாக்கியுள்ளார். வெற்றி தோல்விகளில் அணியில் உள்ள எல்லோருக்கும் பங்குள்ளது என்பது தோனியின் கேப்டன்சியில் உறுதிப்படுத்தப்பட்டது. தோனியின் கேப்டன்சியில் நட்சத்திரக் கலாச்சாரம் முழுவதுமாக ஒழித்துக்கட்டப்பட்டது.

ஆட்டத்தில் இறுதிநிலையில், பார்வையாளர்கள் இருக்கைகளில் நுனியில் அமர்ந்திருக்கும் வேளையில், ஐந்து பந்துகளில் ஆறு ரன் அடிக்க வேண்டும் என்னும் நிலையில் ஒற்றை ரன் அடிக்க வாய்ப்புக் கிடைத்தால் அதை எடுக்க மாட்டார். கடைசித் தருணத்தில் அந்தப் பக்கம் போய் நின்றுகொண்டு ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று. ஒரு ரன் எடுக்க ஓடிவரும் தனது கூட்டாளியைக் கையமர்த்திவிட்டு அமைதியான முகத்துடன் அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராவார். அவரது மட்டையிலிருந்து பவுண்டரியோ, சிக்சரோ பறக்கும். அந்த அமைதிக்குப் பின்னால் இருந்த தன்னம்பிக்கையும் திறமையும் அந்த கடைசி அடியில் பளிச்சிடும். ரசிகர்களும் சக வீரர்களும் ஆனந்தக் கூத்தாடுவார்கள். தோனியின் முகத்தில் எப்போதும்போல வசீகரப் புன்னகை மட்டுமே மலரும். அதுதான் தோனி.

மேலும் அறிய… https://tinyurl.com/y3parp5h

தோனிக்கு நெருக்கடி: கும்ளே ஆதரவு

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி மிகச்சிறந்த ஃபினிஷர். அணியின் இக்கட்டான நேரத்தில் களமிறங்கி அனாசயமாக ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் தோனி. ஆனால், 2018 ஆம் ஆண்டில் சில மாதங்கள் அவரின் பேட்டிங் தொடர்ந்து கேள்விக்குள்ளானது. இலங்கைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் அரை சதம் அடித்த பின் 16 போட்டிகளில் களமிறங்கியும் அரை சதம் அடிக்க முடியவில்லை. இதனால், தோனியின் பேட்டிங்கை விமர்சித்த சேவாக், வெங்கடேஷ் பிரசாத், சுனில் கவாஸ்கர் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் தோனி கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.

இந்த நிலையில், முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தோனிக்கு ஆதரவு தெரிவித்து கூறியதாவது:-

ஒருநேரத்தில் தோனி நடுவரிசையில் களமிறங்கிச் சிறந்த ஃபினிஷராக இருந்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்தார் என்பதற்காக, தொடர்ந்து நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் தராமல் அவரைச் சுதந்திரமாகவும், அழுத்தங்கள் இல்லாமலும் விளையாடச் செய்ய அணி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். தோனி களமிறங்கினால், அவர்தான் வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சுமையை ஏற்றாதீர்கள். வெற்றிக்கு அணியில் உள்ள அனைவருக்கும் சம பொறுப்பு இருக்கிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களைச் சிறந்த ஃபினிஷராக மாற்றுங்கள். தோனியை மகிழ்ச்சியாக உணர்ந்து விளையாட அனுமதியுங்கள் என்றார் கும்ப்ளே.

மேலும் அறிய… https://tinyurl.com/y3octhcf

தோனியை காப்பாற்றினேன்: சீனிவாசன்

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம், ஆனால் ஆஸ்திரேலியாவில் சரியாக ஆடவில்லை. எனவே தேர்வுக்குழுவில் ஒருவர் தோனியை கேப்டன்சியை விட்டு நீக்க வேண்டும் என்று விரும்பினார். ஒருநாள் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்க முடிவெடுத்தனர். அதெப்படி? அப்போதுதான் உலகக்கோப்பையை அவர் தலைமையில் வென்றுள்ளோம், ஒருநாள் அணி கேப்டன்சியிலிருந்து எப்படி நீக்கமுடியும் என்றேன்?

ஒரு விடுமுறை நாள், நான் கால்ஃப் ஆடிக்கொண்டிருந்தேன். திரும்பி வந்தேன், சஞ்சய் ஜக்தாலே அப்போது பிசிசிஐ செயலர். அப்போது அவர் சொன்னார், ‘அவர்கள் கேப்டனாக தோனியை தேர்வு செய்ய மறுக்கின்றனர். தோனி வீரராக மட்டுமே தொடர முடியும் என்கின்றனர்’ என்றார். நான் அப்போது, எம்.எஸ்.தோனிதான் கேப்டனாக நீடிப்பார் என்று பிசிசிஐ தலைவராக நான் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு தோனி விரும்பும் வரை விளையாடலாம். ஏனெனில், தோனி போட்டியைத் தாண்டி எதையும் சிந்திக்க மாட்டார், பாதை விலக மாட்டார், அதே கொள்கையைத்தான் இப்போதும் கடைப்பிடிப்பார். அதுதான் வெற்றிக்கு காரணம் என்றார்.

மேலும் அறிய… https://tinyurl.com/y5lbo7mm

தோனி ஓய்வு அறிவிப்பு:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.

தனது இன்ஸ்டாகிராமில்,” அனைத்து சூழ்நிலைகளிலும் நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றிகள். இன்று (15.08.2020) மாலை 1929 (07.29) மணி முதல் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கருதி கொள்ளுங்கள்” என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

தோனி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் , “இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு மகத்தானது. ஒன்றாக இணைந்து 2011 உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என்று தெரிவித்தார்.

விராத் கோலி கூறும்போது, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒரு நாள் தனது பயணத்தை முடிக்க வேண்டும். ஆனால், நமக்கு நெருக்கமான ஒருவர் அந்த முடிவை அறிவிக்கும்போது, அதிகப்படியான உணர்ச்சியை உணர்கிறோம். நீங்கள் நாட்டிற்காக செய்த அனைத்தும் மக்கள் இதயத்தில் இருக்கும், ஆனால் உங்களிடமிருந்து நான் பெற்ற பரஸ்பர மரியாதை, அரவணைப்பு எப்போதும் என்னுடையதாகவே இருக்கும். உலகம் சாதனைகளைப் பார்த்தது, நான் தோனி என்கிற அந்த நபரைப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் நன்றி” என்று விராட் கோலி தெரிவித்தார்.

தோனிக்கான விருதுகள்

விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னாவை 2008-ம் ஆண்டு வழங்கி மத்திய் அரசு தோனியை கவுரவித்தது. 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற அவர், இந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கும் தேர்வாகியுள்ளார். இது தவிர்த்து இந்திய ராணுவத்தில் கவுர லெப்டினண்ட் கர்னல் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு ஒழுங்காக வரவில்லை எனக் கூறி தோனியை நீக்கிய இந்தியன் ரயில்வே மீண்டும் அவருக்கு கவுரவ பதவி வழங்க தயாராயிருந்தது. ஆனால் மதியாதோர் பிளாட்பார்ம் மிதியதே என்ற வாசகத்திற்கு ஏற்ப அந்த பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

உலகின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக ஆகிவிட்ட போதும் கால்பந்து மீதான தோனியின் காதல் தணியவில்லை போலும். அதனால்தான் ஐ.எஸ்.எல். தொடரில் சென்னையின் எஃப்சி அணி உரிமையாளராக உள்ளார் தோனி. தனது மனைவி ஷாக்சி பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இவரது வாழ்க்கை வரலாறு M.S.Dhoni Untold Story என்ற பெயரில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு போட்டது.

மகேந்திர சிங் தோனி. இந்த பெயருக்கு பின்னால் உள்ள சாதனைகளும் சறுக்கல்களும், விமர்சனங்களும், சர்ச்சைகளும் அதிகம். ஆனால் உண்மை ஒன்றே ஒன்றுதான். கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் வரை இந்த நாயகனின் பெயர் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப் பிரிவு: மக்கள் குரல் இணையதளக் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *