மதுரை, ஜூலை 8–-
தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர் அண்ணாமலை என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை என அனைத்து குற்றங்களும் நடக்கின்றன. நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவுக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
4 நாட்களுக்கு முன்பு சேலத்தில் முன்னாள் மண்டல குழு தலைவரை, தி.மு.கவினர் கூலிப்படையை ஏவி கொன்றனர். 2 நாட்களுக்கு முன்பு, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
அரசியல் கொலைகள் அதிகரிப்பு
தமிழகத்தில் தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருகிறது. காவல்துறையை கண்டு யாரும் அச்சப்படுகின்ற சூழல் இல்லை.
தி.மு.க. ஆட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
அண்ணா தி.மு.க.வில் சேர்ந்து விடலாம் என ஓ.பன்னீர்செல்வம் நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. ஏற்கனவே பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். அவர் எப்போதும் இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை.
கட்சியில் இணையும்போது, ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று கேட்டார். எங்களிடம் 97 சதவீதம் பேர் இருந்தபோதும், அவர் கேட்ட பதவியை கொடுத்தோம். அப்போதும் அவர் மனதுக்கு திருப்தி ஏற்படவில்லை.
அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பே இல்லை
ஒற்றை தலைமை வேண்டும் என்கிறபோது அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு தான் அவர் நீதிமன்றம் சென்றார். பொதுக்குழு கூடி நடவடிக்கை எடுத்தபோது, ரவுடிகள் மூலம் கட்சி தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது.
இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரையும், இரட்டை இலையையும் எதிர்த்து போட்டியிட்டார். எனவே அவர் அண்ணா தி.மு.க.வில் இணைய ஒரு சதவீதமும் வாய்ப்பில்லை. மன்னிப்பு ஒருபோதும் கொடுக்கப்படமாட்டாது.
துரோகத்தின் மொத்த உருவம்
அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் பேசுவார். துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான். பிரதமரின் அருகில் நான் இருந்தது உண்மைதான். அதன்பின்பு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் தலைவர்களை விமர்சித்தால், நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம்.
அண்ணாமலை கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர். நாங்கள் 50 ஆண்டுகாலம் கட்சியில் உழைத்து பதவிக்கு வந்திருக்கிறோம். அவரைப் போல் ‘‘அப்பாயின்மென்ட்’’ பெற்று பதவிக்கு வரவில்லை. அவரை எப்போது வேண்டுமானாலும் கட்சியில் இருந்து நீக்கலாம். அரசியல் தலைவர் எப்படி பேச வேண்டும் என்பதை அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும்.
விஷச்சாராய விவகாரத்தில் மாநில அரசு விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். சி.பி.ஐ. விசாரித்தால் நியாயமான முறையில் விசாரணை நடக்கும். எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கு சிவில் வழக்கு. இதற்கு 100 போலீசாரை வைத்து தேடுகிறார்கள். அண்ணா தி.மு.க.வை பழி வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதே கதி அவர்களுக்கும் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அண்ணா தி.மு.க. சார்பாக வழங்கப்பட்டது.