செய்திகள்

தலைவர்களை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை: எஸ்.பி.வேலுமணி பேச்சு

கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம்

கோவை, செப்.20-

பெரியார், அண்ணா, ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்றும், கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

அண்ணா தி.மு.க. கோவை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக உழைக்காமல் பதவிக்கு வந்து விட்டார். அண்ணா ஏழைகளுக்காக ஆரம்பித்த கட்சி, குடும்ப சொத்தாக மாறி விட்டது. வேலுமணி, தங்கமணி பா.ஜ.க. பற்றி பேசவில்லை என சிலர் கூறுகிறார்கள். எங்களுக்கு எதிரி தி.மு.க.தான்.

கூட்டணிக்காக எங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணா பெயரில் கட்சியை வைத்து உள்ள நாங்கள் எப்படி அண்ணாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்வோம்.

அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார். பெரியார், அண்ணா, ஜெயலலிதா பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. அண்ணா குறித்து உண்மைக்கு புறம்பாக, வரலாற்றை திரித்து பொதுவெளியில் பேசுவது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசும்போது ‘‘எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு. டாலர் நோட்டு. ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த, இத்துப்போன செல்லாத நோட்டு’’ என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *