செய்திகள்

தலையங்கம் தென்கொரிய விமான விபத்து

Makkal Kural Official

தென் கொரியாவில் நேர்ந்த மிகப்பெரிய விமான விபத்தில் 179 பேர் பலியானதால் நாடே துயரத்தில் மூழ்கியுள்ளது. ஞாயிறுன்று அதிகாலை முஆன் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜு ஏர் 7C 2216 என்ற போயிங் 737-800 விமானம் தரையிறங்கும் இறுதி நிமிடத்தில் தான் இந்த கெடூர விபத்து அரங்கேரியுள்ளது.

இந்த 2024 ஆம் ஆண்டின் இறுதி நாட்கள் மிகக் கசப்பாகவே முடிந்துள்ளன.

175 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற அந்த துரதிர்ஷ்டவசமான விமானம், பாங்காக்கில் இருந்து அதிகாலை1:30 மணிக்கு புறப்பட்டு, காலை 8:30 மணிக்கு முஆனில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், விமானம் தரையிறங்கும் சில வினாடிகள் முன்புதான் இச்சோக நிகழ்வு ஏற்பட்டது..

விமானம் தரையிரங்கும் தருவாயில் ஒரு மின்னல் ஒளி பிரகாசமும் கூடவே வெடிச் சத்தம், அதன் பின் புகை மண்டலமாகி தீப்பற்றி எரியும் காட்சிகள் நடந்துள்ளது..

ஒரு பறவை கூட்டம் மோதியதாலேயே இந்தத் துயர சம்பவம் நடந்தது என்று உறுதியாகி விட்டது.

விபத்திற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர், ஒரு பயணி தனது செல் போனில் “விமானத்தின் இறக்கையில் ஒரு பறவை மாட்டிக்கொண்டது என்று”குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

காலை 8:57 மணிக்கு விமான நிலைய கட்டுப்பாட்டு மையம் பறவை மோதல் அபாயத்தை எச்சரித்தது. பின், 8:58 மணிக்கு விமானத்தின் பைலட் ‘மே டே’ மே டே’ ‘May Day, May Day’ என அலறல் கொடுத்தார்.

விமானம் சிக்கலை சமாளிக்க முயற்சித்தாலும் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலைய எல்லைக்கோட்டை மீறி எல்லைப் பகுதி கம்பி வேலியில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியது.

மொத்ததில் சில நிமிடங்களில் விமானத்தின் உடல் முழுமையாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது., அதில் இருந்த அனைவரின் உடல்களும் சிதறித் தீயில் எரிந்து சின்னாபின்னமாகி கருகி இறந்தனர். அவர்களின் அடையாளங்களை கண்டறிவது முடியாத ஒன்றாகியுள்ளது.

விமான ஊழியர்களில் இரண்டு பேர்—ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்—மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.

82 ஆண்களும் 93 பெண்களும் ஆறு விமான ஊழியர்களும் கொண்ட பயணிகளின் தொகுதியில் இளம் மூன்று வயது சிறுவனும் வயதான 78 வயது முதியவரும் இருந்தனர். இரண்டு பயணிகள் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் 20 மற்றும் 40 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டனர். புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியைப் பகிர விரும்பிப் பயணம் மேற்கொண்டவர்கள், துரதிர்ஷ்டவசமாக இறந்தனர். அவர்களின் குடும்பத்தினர் துக்கத்தில் மூழ்க புத்தாண்டு பூரிப்பெல்லாம் மறைந்தது. நாடே சோகக் கடலில் மூழ்கி விட்டது,.

15 ஆண்டுகள் பழமையான இந்த விமானம், இதற்கு முன் எந்தவிதமான விபத்துகளிலும் சிக்கவில்லை. ஆனால் தற்போது தீயில் எரிந்து சாம்பலான காட்சியால் உலகம் முழுவதும் அதிர்ச்சி நிலவுகிறது. இந்த சோக நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அனைவரின் இதயங்களையும் கிழித்து வருகின்றது.

இந்தத் துயர சம்பவம் தென் கொரியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. பலரின் கனவுகளை தாங்கிச் சென்ற விமானம் இப்படிப்பட்ட விபத்து காரணமாக நெஞ்சைக் கணக்கவைக்கும் சோக நினைவாகி விட்டது.

மரணித்த ஆன்மாக்கள் அமைதி அடைய, அவர்களின் குடும்பங்கள் இந்த மிகக் கடினமான சோகத்தை சமாளிக்க வலிமை பெறப் பிரார்த்திப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *