அவ்வளவாக கூட்டம் இல்லாத ஒரு நகரப் பேருந்து குண்டும் குழியுமாக இருக்கும் தார்ச் சாலையில் விழுந்து விழுந்து சென்று கொண்டிருந்தது.
மெட்ரோ ரயில் போடும் பாதை என்பதால் இருபக்கமும் வேலி போல அடைத்து வைத்திருந்தார்கள்.
நெருங்கிப் போகும் வாகனங்களுக்கிடையே மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது அந்த நகரப் பேருந்து.
மெதுவாகச் செல்லும் பேருந்து என்பதால் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் 22 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் பட்டென பேருந்தில் ஏறினார்கள். பெண் இருக்கையில் இடம் இருக்க அந்தப் பெண் அமர்ந்தாள்.
ஆண்கள் பக்கம் இடமிருந்தாலும் அந்த ஆண் உடன் வந்த பெண்ணின் அருகில் நின்று கொண்டு ஹாயாக இருவரும் ஒரு இயர் போனில் ஆளுக்காெரு பக்கம் இரண்டு காதுகளில் ஹியர் பாேன் வைத்துக்கொண்டு தலையாட்டுவதும் சிரிப்பதுமாய் இருந்தார்கள்.
அந்த ஆண் ,பெண் இருக்கையில் சாய்ந்தவாறு பெண்கள் அமரும் இடத்தில் கையை வைத்துக்கொண்டு திமிராக நின்று கொண்டிருந்தான். அப்படி நின்று கொண்டிருந்தவனை பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அதையெல்லாம் சட்டை செய்யாத அந்த ஆண் உடன் வந்த பெண்ணுடன் பேசிச் சிரித்துக் கொண்டே வந்தான்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு பெண்.
ஹலோ அவ்வளவு இடம் இருக்கு அங்க போய் நில்லுங்க. இங்க பாெம்பள பக்கம் நின்னுட்டு இருக்கீங்க என்று கொஞ்சம் அதட்டல் குரலில் கேட்க
இதைப் பொறுக்காத அந்த இளம்பெண் மைண்ட் யுவர் பிசினஸ் என்று அந்தப் பெண்மணியைத் திட்டினாள்.
திஸ் இஸ் நாட் யுவர் ஹவுஸ். திஸ் இஸ் நாட் யுவர் லவ்வர்ஸ் பார்க் .யூ கோ டு கோ டு தட் சைட் என்று ஒரு வார்த்தை ஆங்கிலம் பேசியதற்கு அந்தப் பெண்மணியின் வாயில் இருந்து அடுக்கடுக்காக ஆங்கில வார்த்தைகள் வந்தன .
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண்மணி வாய் அடைத்து போனாள். அருகில் இருந்த பெண்களும் அதிகாரமாக நின்று கொண்டிருந்த ஆணையை ஆண் பக்கம் விரட்டினார்கள் .
அந்த இளம் பெண்ணுக்கு ரொம்பவே அவமானமாகப் போய்விட்டது. என்ன பேசுவது என்று தெரியவில்லை .பேருந்தில் இருந்த பாதிப்பேர் அந்தப் பெண்ணை வெறிக்கப் பார்த்தார்கள் .
அந்த ஆண் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.
இந்த காலத்து ஆளுகளுக்கு மரியாதை அப்படிங்கறது என்னன்னு தெரியல. பெரியவங்கள பாத்தா மரியாத கொடுக்கணும்ன்றது தெரியல. அதனாலதான் காலம் கெட்டுப் போய் கெடக்கு அந்தப் அந்த பெண்மணி பேசியதற்கு அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் ஆமா என்றார்கள்.
அதற்கு மேல் அந்தப் பேருந்தில் உட்கார பிடிக்காத அந்த இளம் பெண்ணும் இளைஞனும் வரும் நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்கினார்கள்.
இறங்கி அந்த இளம்பெண் ஜன்னலோரம் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியை வசை பாடி விட்டுச் சென்றாள்.
இதை அருகில் இருந்த பெண்களெல்லாம் பார்த்தார்கள் அந்த இளம் பெண்ணும் இளைஞனும் இறங்கிய பிறகு பேருந்தில் இருந்தவர்களுக்கெல்லாம் வாய் முளைத்துக் கொண்டது. தத்துவம் பேசஆரம்பித்தார்கள்.
இது தலைமுறை இடைவெளி நம் காலத்தில் இருப்பது போல் இப்பாேது இல்லை.
இப்போதெல்லாம் பெரியோர்களுக்கான மதிப்பு மரியாதை ரொம்பவே குறைவு. இவர்களைப் பார்த்து நாம் தான் ஒதுங்கி செல்ல வேண்டுமே ஒழிய அவர்களுக்கு புத்தி சொல்லி நேர்வழிப்படுத்த நினைப்பது நமக்கு நாமே சேற்றை அள்ளிப் பூசிக் கொள்வது போன்றது என்று ஒரு பெரியவர் சொல்லி வாய் மூடுவதற்குள்
ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் சிரித்துக் கொண்டே பேருந்தில் ஏறினார்கள்.
இவர்களை திட்டுவதா இல்லை அமைதியாக இருப்பதா? என்று விழித்தார்கள் பயணிகள்.
ஏன் இவர்கள் நம்மை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள் என்று அந்த இளஞ்ஜாேடிக்குத் தெரியாமல் இருக்கலாம். பேருந்தில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இது தெரியாத ஜாேடி சிரித்துக் காெண்டார்கள்.
அதில் ஒருவர் இவர்களைப் பார்த்து சிரித்து விட்டார். மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
ஜாேடிக்கு இது என்னவாே பாேலானது.