ஆனந்திக்கு அவசர பணத் தேவை.
சனிக்கிழமை காலை 11 மணி.
யாரிடம் கடன் கேட்பது…. ?
ரோஸி அம்மாளுக்குத் தைத்த 4 புதிய ஜாக்கெட்டுகளைத் துணிப்பையில் வைத்து எடுத்துக் கொண்டு சைக்கிளில் கிளம்பினாள் ஆனந்தி. 10 நிமிட பயணத்திற்குப் பின்பு ரோஸி அம்மாள் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள் ஆனந்தி.
அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டதும் ரோஸி அம்மாள் கதவைத் திறந்து பார்த்து ‘‘ அட ஆனந்தியா? உள்ளே வா ஆனந்தி’’ என்று அன்போடு வரவேற்றோர். வீட்டினுள் வந்த ஆனந்தி தான் கொண்டு வந்த துணிப்பையிலிருந்த ஜாக்கெட் துணிகளை எடுத்து ரோஸி அம்மாளிடம் கொடுத்தாள். ஆனந்தியிடமிருந்து ஜாக்கெட் துணிகளை வாங்கிக் கொண்ட ரோஸி அம்மாள் உள்ளே சென்றார். ஜாக்கெட் துணிகளை பீரோவில் வைத்துவிட்டு வந்து ஜாக்கெட்டுகள் தைத்த கூலிப்பணத்தை ஆனந்தியிடம் கொடுத்தாள்.
ரோஸி அம்மாளிடமிருந்து பணத்தைப் பெற்ற ஆனந்தி, பணத்தை எண்ணிப் பார்த்து பத்திரமாக பர்சில் வைத்ததும் ரோஸி அம்மாளிடம் ….
‘‘அம்மா!’’என்றாள்
‘‘சொல்லு ஆனந்தி’’
‘‘அது வந்து…. அம்மா…’’
‘‘ஆனந்தி நீ ஏதோ சொல்ல நினைக்கிறே…’’,
‘‘ஆனா, தயங்கறே, சொல்ல வந்ததைத் தயாங்காமல் சொல்லு’’ என்றாள் ரோஸி அம்மாள் அன்போடு .
‘அம்மா! என்கு அவசரமா 10 ஆயிரம் ரூபாய் வேணும். அந்தப் பணத்தை கடனாகக் கொடுங்க, அஞ்சு வட்டிக்கு கொடுங்க, அவசரத் தேவையா இருக்கிறதாலே 10 வட்டியாக இருந்தாலும் பரவாயில்லேம்மா’’ என்று கெஞ்சிக் கேட்டாள். அவசர பணத் தேவைக்கு
என்ன காரணம் என்பதை ஆனந்தியைப் பார்த்து ‘‘ஆனந்தி! 10 ஆயிரம் பணம் எதுக்கு? காரணத்தைச் சொல்லு. அந்த பணத்தை அய்யா மூலமா ஏற்பாடு செய்யறேன்’’ என்று சொன்னாள்.
ஆனந்தி அவரைப் பார்த்து ‘அம்மா! என் மூத்த பொண்ணு லதாவுக்கு இந்த வருஷம் தலைப் பொங்கல். அவளுக்கு பொங்கல் சீர் செய்யணும். அதுக்கு குறைஞ்சது 10 ஆயிரம் ரூபாய் தேவை. பொங்கல் சீர் செய்ய வேண்டிய நேரத்திலே எங்க வீட்டுக்காரருக்கு டெங்கு காய்ச்சல் வந்திருச்சு. கடந்த 2 வாரமா அவரு வேலைக்குப் போகலே. அவர் வேலை செய்யற டெக்ஸ்டைல் கம்பெனியிலேயும் இப்பக் கடன் கேட்க முடியாது. ஏன்னா, அங்கேயும் அவரு வாங்கி இருக்கிற பழைய கடன் பணம் பாக்கி இருக்குது. என்னுடைய வருமானம் இந்த மாசம் போதுமானதாக இல்லே. என்னுடைய 2 வது பொண்ணு சுதா இந்த வருஷம் 12 வது படிக்கிறாள். அவள் படிப்பு, டியூஷன், துணிமணி இதுக்கெல்லாம் நிறைய செலவு ஆகுது. தற்சமயம் வேற யாருக்கிட்டேயும் கடன் கேட்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். எப்படியாவது பணம் கிடைக்க உதவி செய்யுங்கம்மா. நான் உங்களை மட்டும் தான் நம்பி இருக்கிறேன். உங்களாலே உதவி செய்ய முடியலேன்னா, உங்களுக்குத் தெரிஞ்சவங்க மூலமா 10 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்கம்மா, அந்தப் பணத்தை 2 மாசத்திலே திருப்பிக் கொடுத்திடறேன்’’ என்று கெஞ்சிக் கேட்டாள் ஆனந்தி.
ஆனந்தியின் கஷ்டத்தை புரிந்து கொண்ட ரோஸி அம்மாள் ஆனந்தியிடம் பொங்கல் சீர் என்றால் என்ன? அதுக்கு ஏன் 10 ஆயிரம் செலவு? என்று கேட்டாள். அதற்கு ஆனந்தி ‘‘அம்மா! புதுசா கல்யாணமான ஒரு பொண்ணுக்கு முதல் வருஷப் பொங்கல் ‘தலைப்பொங்கல்’ அதைக் கொண்டாடத் தாய் வீட்டிலிருந்து பொங்கல் சீர் செய்யணும். பொங்கல் சீர் வரிசையிலே வெண்கலப் பொங்கல் பானை, கரண்டிகள், 11 படி பச்சரிசி, 9 படி புழுங்கல் அரிசி, அச்சு வெல்லம், கருப்பட்டி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கொத்து, வாழைத்தார், காய்கறிகள், கிழங்குகள், ஒரு மூட்டைசாப்பாட்டு அரிசி, மளிகை சாமான், துணிமணி இதெல்லாம் தரணும். பெத்த பொண்ணுக்குப் பிறந்த வீட்டிலிருந்து பொங்கல் சீர் செய்யறது கட்டாயம்மா. அதுக்காகத்தான் 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறேன்’’.
இது போதுமா?’’
‘‘ என்னுடைய சேமிப்புப் பணமா 3 ஆயிரம் வச்சிருக்கேன். அதை வச்சு நான் சமாளிச்சிடுவேன்’’ என்று விளக்கம் தந்தாள்.
ஆனந்தியின் குடும்பக் சூழ்நிலையை அறிந்து கொண்ட ரோஸி அம்மாள் ஆனந்திக்கு உதவி செய்ய மனம் இரங்கினாள். ஆனந்தியைப் பார்த்து ‘‘ஆனந்தி! உன்னுடைய சூழ்நிலையைத் தெரிஞ்சுகிட்டேன். உங்க குடும்பத்தில் ‘பொங்கல் சீர்’ என்பது தவிர்க்க முடியாதது. பொங்கல் சீர் செலவு வீண் செலவுன்னு சொல்ல முடியாது. உனக்கும் எனக்கும் இருக்கும் நட்புக்கு வயது 5 வருஷம் ஆகுது. உன்னை நம்பிக் கடன் கொடுக்கலாம். நீ கேட்ட கடன் பணம் 10 ஆயிரம் ரூபாயை எங்க வீட்டுக்காரர் மூலமா ஒரு பைனான்ஸ்காரர் மூலம் இன்னிக்கே ஏற்பாடு செய்யறேன். 2 மாசத்திலே பணத்தை திருப்பிக்
கொடு . வட்டி தர வேண்டாம். அந்த வட்டியை நான் பைனான்ஸ்காருக்குத் தர்றேன். ஏன்னா, ஒரு நல்ல காரியத்துக்கா நான் உதவி செய்யறேன். எனக்கு ஒரே ஒரு பையன் தான். பொண்ணு இல்லே. உன் மூத்த பொண்ணு லதாவை என் பொண்ணு மாதிரி நேசிக்கிறேன். நாளைக்கு சாயந்தரம் 6 மணிக்கு வந்து 10 ஆயிரம் பணத்தை நீ வாங்கிட்டு போ’’ என்றாள் ரோஸி அம்மாள்.
ரோஸி அம்மாள் ஆறுதலாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட ஆனந்தி ஆனந்தக் கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டுத் தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாள்.