நாடும் நடப்பும்

தலைநிமிர்ந்து நடைபோடும் தமிழகம்: ஸ்டாலினின் ஆட்சித் திறன் பாரீர்!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஜூன் 7 ந் தேதியுடன் முப்பது நாள் நிறைவடைந்து விட்டது.

1440 நிமிடங்கள் (ஒருநாள்) கடந்துவிட்டது. கிட்டத்தட்ட ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் நொடி முள் போலத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்… அவரது தலைமையிலான அமைச்சரவையும்…

மு.க.ஸ்டாலின் முதல்வரானால் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என பலதரப்பிலிருந்தும் எழுந்த எதிர்பார்ப்புகளுக்கு ‘உழைப்பு’ என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் .

கொரோனாவிலிருந்து மக்களை காக்கும் பொறுப்பு ஒருபக்கம், மாணவர்களின் நலன் ஒருபக்கம், மாநில உரிமை ஒரு பக்கம் என பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை.

முதல்வராக பொறுப்பேற்ற நாளில் நிகழ்ந்த தேனீர் விருந்து தொடங்கி பள்ளி கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் பிளஸ் 2 தேர்வு குறித்து விவாதித்தது வரை சமீபகால அரசியலில் நிகழ்ந்த அதிசயம்!

நாட்டின் நலனுக்கு அதிகார குவியல் பலனளிக்காது என்றுணர்ந்த முதலமைச்சர் அதிகார பரவலை அமல்படுத்தி மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டார்.

அனைத்துக் கட்சி குழு அமைத்து ஊரடங்கு சட்டத்தை பதமாக அமல்படுத்தினார். விளைவு தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக தகவல்.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு பணம் தேவை. உள்ளூர் தமிழர்கள் துவங்கி உலக தமிழர்கள் வரை நிதி தாரீர் என அழைப்புவிடுத்தார்.

இதுவரை ரூ.280.20 கோடி குவிந்து உள்ளது. அனைத்து கணக்குகளும் வெளிப்படையாக மக்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.

இந்த நிதி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன்படி இதுவரை பெறப்பட்டு உள்ள நிதியிலிருந்து ரெம்டெசிவிர் மருந்துகளை அரசு மருத்துவமனைக்கு வழங்குவதற்காகவும் மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரெயில் மூலமாக கொண்டு வருவதற்கு தேவையான கண்டெயினர்களை வாங்குவதற்காகவும் முதற்கட்டமாக ரூ.50 கோடி வழங்கினார்.

2 வது கட்டமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சிஆர். பரிசோதனைகள் நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு ரூ.50 கோடியை வழங்கிடவும் ஆணை பிறப்பித்தார்.

பின்னர் அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதரகருவிகளை வாங்குவதற்கு ரூ.41.40 கோடியை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தார்.

தற்போது கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ‘ஆம்போடெரிசின்’ உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு ரூ.25 கோடியை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஜூன் 3 ந்தேதி ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீட்டிய மடல் ஒன்றில், “யாரிடமிருந்து பாராட்டு வரவில்லையோ அவர்கள் பாராட்டும் வகையில் நடந்து வருவதாக” குறிப்பிட்டிருந்தார்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவைப் புறக்கணித்த கோவையை மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக கலகக் குரல் எழுந்தது. கோவையில் பத்து தொகுதிகளிலும் திமுக தோற்றது இங்கு கவனிக்கத்தக்கது.

கோவைக்கு நேரடியாக வந்து கொரோனா பணிகளை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல் கவசஉடை அணிந்து கொரோனா தொற்றாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்திய ஒன்றியத்தில் இது டிரெண்டானது.

இந்தியாவில் முதன்முறையாக கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை அறைக்குள் சென்ற முதல்வர் என பெயர்பெற்றதோடு மட்டுமல்லாமல் கோவை புறக்கணிப்பு என்ற குற்றச்சாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி திறன் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற அண்ணாவின் வார்த்தையை உறுதியாக்கி வருகிறது.

மக்கள் நலன் காக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நலனும் எங்களுக்கு முக்கியம் என்று எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே அக்கறை மடல் ஒன்றை முதல்வருக்கு எழுதி உள்ளார்.

94 வயதான டாக்டர் ஹண்டே, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள

கடிதத்தில், “கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிப்பது தொடர்பாக நீங்கள் அறிவித்த அறிவிப்பை விட, உங்களது பாசமிகு தந்தை கருணாநிதிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்திருக்கவே முடியாது.

கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது எனக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. கோவை அரசு மருத்துவ மனையில் 94 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன். எனது தந்தை டாக்டர் எச்.எம்.ஹண்டே அங்குதான் டாக்டராக பணியாற்றினார்.

அதேநேரம் நான் தங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கிறேன். தயவு செய்து இதுபோல ஆபத்தான இடங்களுக்கு செல்ல வேண்டாம். உங்களது ஆரோக்கியமே, தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆரோக்கியமாகும். இரவு பகலாக உங்களது அயராத உழைப்பினால் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களுடைய தொடர் வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு தலைநிமிர முதல்வரின் உடல் நலனும் எங்களுக்கு முக்கியம் என்ற கோரிக்கையை தமிழக மக்கள் அக்கறையுடன் முன் வைத்து வருகின்றனர். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *