சிறுகதை

தலைத் தீபாவளி | துரை. சக்திவேல்

மாலை நேரம் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தார் ராமசாமி.

அப்பா தீபாவளிக்கு எனக்கு டிரஸ் எடுக்கணும் என்று தனது தந்தையிடம் கேட்டான் மதன்.

அப்பாவுக்கு இப்ப பணம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு… கொஞ்சம் பொரு ஏதாவது பணம் வந்தவுடன் அப்பா உனக்கு டிரஸ் எடுத்து தருகிறேன் என்று ராமசாமி கூறினார்.

சென்னை பெரம்பூர் பகுதியில் வசிப்பவர் ராமசாமி. தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக வேலை பார்க்கும் அவரது மகள் லட்சுமிக்கும் வேளிச்சேரி பகுதியில் பகுதியில் வசிக்கும் என்ஜினீயர் வரதன் என்பவருக்கும் 3 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அந்த நேரத்தில் தான் 9ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் மதன் தனக்கு புது டிரஸ் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது வீட்டு சமையல் அறையிலிருந்து ராமசாமியின் மனைவி தங்கம் வந்தார்.

என்னங்க…. மதியம் நம்ம பொண்ணு லட்சமி போன்ல பேசினா….

அவங்க மாமியார் தீபாவளி சீர் எடுத்துக்குட்டு உங்க அம்மா எப்ப வருவாங்கன்னு கேட்கிறாங்கன்னு கேட்டா.

நம்ம பொண்ணுக்கு இது தலை தீபாவளி. அவளுக்கு சீர் செய்யனும்.

என்ன லட்சுமி என் தலையில் பெரிய குண்ட தூக்கி போடுற… தலை தீபாவளின்னா சீர் செய்யனும்மா…

நம்ம பொண்ணுக்கு கல்யாணம் ஆகி 3 மாதம் தான் ஆகுது. கல்யாணத்துக்கு சீர் செய்ததுக்கு வாங்கிய கடனை அடைக்கவே ஆரம்பிக்கலை.

அதுக்குள்ள இன்னொரு சீர் கொடுக்கணும்மா…

தலை தீபாவளின்னா… பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆடை எடுக்கணும். அவ்வளவு தானே. அதை எடுக்கத்தான் போறாம்.

அப்புறம் என்ன சீருன்னு தனியா கொடுக்க….

இல்லங்க… நம்ம சம்மந்தியம்மா கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னாங்க.

தீபாவளிக்கு மாப்பிள்கைக்கு தங்க மோதிரம் கொடுக்கணும் பொண்ணுக்கு பட்டுப்புடவை எடுக்கணும் சீர் வரிசை எல்லாம் செய்யனும்னு….

தீபாவளிக்கு தானே உங்ககிட்ட அப்புறமா சொல்லிக்கிடாமேன்னு நினைச்சேன்.

அடியே சேர்த்து வச்ச மொத்த பணத்தையும் செலவு செய்து, பத்தாதுக்கு வட்டிக்கு கடனை வாங்கி நம்ம பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தோம்.

நான் என்ன அரசாங்க ஊழியரா…. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சாதாரண அக்கவுண்டன்ட் தான்.

நம்ம சக்திக்கு மீறி தான் நம்ம பொண்ணுக்கு கல்யாணம் செய்து வச்சோம்.

3 மாசத்துக்குள்ள மறுபடியும் மாப்பிள்ளைக்கு மோதிரம், பட்டுப்புடவை, மாப்பிள்ளைக்கு பேண்ட், சட்டை, சீர் பொருட்கள் எல்லாம் வாங்கனும்னா அதிகமா செலவாகும்.

ஏற்கனவே கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்காக பாதி சம்பளத்தை பிடிச்சுடுவாங்க.

வெளியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட மீதி பாதி பணம் போகிடும். மீதி இருக்கிற பணத்தை வச்சு தான் வீட்டு செலவை கவனிச்சுக்கிட்டு, நம்ம பையனோட படிப்புக்கு செலவு செய்யனும்.

நீ சொல்வதை கேட்டா எனக்கு தலை சுற்றுது என்று தலையில் கையை வைத்து சோபாவில் சாய்ந்தார் ராமசாமி.

என்னங்க பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்தா மாப்பிள்ளை வீட்டில் கேட்கறத கொடுக்கத்தான் செய்யனும்.

பணத்துக்கு ஏதாவது முயற்சி செய்து சீர் பொருளை வாங்கிக் கொடுத்தாதான் நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லபடியா இருக்கும்.

நான் கல்யாணம் பண்ணிய போது இப்படி எந்த சீர்வரிசையும் நான் உங்க வீட்டில் கேட்கவே இல்லையே?

அது உங்க தப்பு.

ஏதோ நம்ம செய்ய முடியுறத செய்வோம்னு நம்ம பொண்ணுக்கிட்ட சொல்லி அவங்க மாமியார் கிட்ட சொல்ல சொல்லு என்றார் ராமசாமி.

உடனே தங்கம் தனது மகள் லட்சுமியின் சொல்போனில் தொடர்பு கொண்டு, அப்பா பணத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு? தீபாவளி சீர் வரிசையை அப்புறம் செய்றேன்னு சொல்றாரு. நீ உன் மாமியார்கிட்டு கொஞ்சம் சொல்லு என்று கூறினார்.

அம்மா…. எங்க மாமியார் கிட்ட நான் எதுவும் பேச முடியாது. நீயே பேசிக்கோ…. என்னை இதில் இழுக்காதே என்று லட்சுமி கூறினாள்.

இதைத் தொடர்ந்து லட்சுமி தனது மாமியார் கவிதாவிடம் ‘அத்தை எங்க அம்மா உங்க கிட்ட பேசணும்மா.’’’… என்று தனது செல்போனை கொடுத்தார்.

தங்கம், தனது சம்மந்தி கவிதாவிடம் செல்போனில் நலம் விசாரித்தார்.

நல்ல இருக்கேன்… சொல்லுங்க சம்மந்தி என்று கவிதா கேட்டார்.

கல்யாணத்துக்கு ரொம்ப செலவானதால பணம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. தீபாவளி சீர்வரியை அப்புறம் கொடுக்கலாம்னு எங்க வீட்டுக்காரர் சொல்றாரு. அது தான் உங்ககிட்ட ஒருவார்த்தை சொல்லிடலாம்னு….

அது எப்படி? தீபாவளி சீர்வரிசையை தீபாவளிக்கு தான் கொடுக்கணும்.

கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லம் உங்ககிட்டு சொல்லிட்டேனே.

இப்ப வந்து பணம் கஷ்டம்னு பொலம்புறேங்க. எல்லாத்துக்கும் தான் பணம் கஷ்டம்.

அதுக்காக செய்ய வேண்டிய சீர்வரிசையை செய்யாமா விடுவேங்களா.

ஏதோ என் பையனுக்கு உங்க பொண்ணை பிடிச்சதால இந்த சம்மந்தத்துக்கு நாங்க ஒத்துக்கிட்டோம்.

எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தெல்லாம் எங்க பையனுக்கு பொண்ணு வந்தது. அதையொல்லாம் விட்டுட்டு நீங்க எல்லாம் செய்துடுவேங்கன்னு சொன்னதால தான் என் பையனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சேன்.

நீங்க தீபாவளி சீர் வரிசை கொண்டு வந்து கொடுத்தா, என் பையனும் உங்க பொண்ணும் தலை தீபாவளிக்கு உங்க வீட்டுக்கு வருவாங்க….

இல்லைன்னா… அப்புறம் என்னன்னு நான் சொல்லமாட்டேன் என்று செல்போன் இணைப்பை துண்டித்தார் கவிதா.

சம்பந்தியின் பேச்சை கேட்டதும் லட்சுமிக்கு தூக்கி வாரிப்போட்டது.

தனது கணவரிடம் அதன் விபரத்தை எடுத்துக் கூறினார்.

ராமசாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

மறுநாள் காலையில் வழக்கம் போல் அலுவலகத்திற்கு கிளம்பிய ராமசாமி, தனக்கு தெரிந்த இடங்களில் பணம் கேட்டார்.

ஆனால் ஏற்கனவே திருமணத்திற்கு கடன் வாங்கியிருந்ததால் யாரும் பணம் தர முன்வரவில்லை.

நகையை அடமானம் வைத்து பணம் ஏற்பாடு செய்யலாம் என்று தனது மனைவியிடம் யோசனை கேட்டார்.

ஏற்கனவே தன்னிடம் இருந்த நகைகளை தன் மகளுக்கு கொடுத்து விட்டதால் கட்டியிருக்கும் தாலியை தவிர வேறு எந்த நகையும் தன்னிடம் இல்லை என்றும் அவரும் கைவிரித்துவிட்டார்.

ராமசாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

தீபாவளியும் நெருங்கிக் கொண்டே இருந்தது.

மகள் லட்சுமியும் தனது தாயிடமும் தந்தையிடமும் அம்மா, எங்க வீட்டுக்காரரு உங்க வீட்டில் என்னை இன்னும் தீபாவளிக்கு அழைக்கவில்லையே? நமக்கு இது தலை தீபாவளி தானே என்று கேட்டார்.

‘‘இல்லங்க வேலையா இருக்காங்க… 2 நாளில் வந்துடுவாங்கன்னு சொன்னேன்’’ என்று சமாளிச்சேன்.

அவருக்கு சீர் விஷயம் எதுவும் தெரியாது.

அம்மா உங்களால் முடிந்தால் சீர்வரிசை செய்யுங்கள்.

எனக்காக ரொம்ப கஷ்டபடாதேங்க. என் தலையெழுத்து என்னவோ அதுபடி நடக்கட்டும் என்று தனது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினாள் லட்சுமி.

தீபாவளிக்கு முந்தைய நாள் காலை.

தங்கத்திற்கு மனசு பொருக்கவில்லை. தனது கணவரிடம் மீண்டும் பேச்சு கொடுத்தார்.

என்னங்க எப்படியாவது பணத்தை ரெடி பண்ண முயற்சி செய்ய கூடாதா? என்று கேட்டார்.

தங்கம்…. எனக்கு மட்டும் நம்ம பொண்ணுக்கு வாங்கிக் கொடுக்க ஆசை இல்லையா? நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் பணம் கிடைக்கவில்லை.

இந்தா, என்னிடம் 8 ஆயிரம் இருக்கு இதை வைத்து ஏதாவது செய்ய முடியுமான்னு பாரு என்று தன்னிடமிருந்த பணத்தை தனது மனைவியிடம் நீட்டினார்.

என்னங்க நாம இரண்டு பேரும் ம்மந்தி வீட்டுக்கு நேரில் போய் விஷயத்தை சொல்லிட்டு, மாப்பிள்ளையையும் பொண்ணையும் தீபாவளிக்கு அழைக்கலாம். அது தான் முறை.

நேரில் போய் பேசினா எல்லாம் சரியாகி விடும் வாங்க போகலாம் என்றாள் தங்கம்.

தனது மனைவி கூறுவது சரி என்று தோன்றியதால்,

ராமசாமி தனது மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பெரம்பூரிலிருந்து வேளச்சேரியில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்றார்.

போகும் வழியில் தன்னிடமிருந்த பணத்துக்கு தனது மகளுக்கு ஒரு புடவையும் மருமகனுக்கு ரெடிமேட் பேண்ட், சட்டை மற்றும் இனிப்பு வகைகள் வாங்கிக் கொண்டு சென்றனர்.

வீட்டுக்கு வந்த தனது பெற்றோரை லட்சுமி வரவேற்று இருக்கையில் அமர வைத்தார்.

மாப்பிள்ளை எங்கம்மா என்று தங்கம் கேட்டார்.

இப்பதான் அம்மா வேலைக்கு போனார்.

உங்க மாமானார்….

அவரு வெளியில் போயிருக்கார் என்று கூறினாள்.

மாமியாரிடம் தனது பெற்றோர்கள் வந்ததை கூறினாள் லட்சுமி.

ராமசாமியும் அவரது மனைவி தங்கமும் தாங்கள் வாங்கி வந்த புத்தாடை மற்றும் இனிப்புகளை தனது மகளிடம் கொடுத்தனர்.

அப்போது சம்மந்தி கவிதா வந்தார்.

லட்சுமி காபி போட சமையல் அறைக்குள் சென்றாள்.

சம்மந்தி வணக்கம்…. நல்லா இருக்கேங்களா…

சொல்லுங்க…. நான் நல்லா இருக்கேன்….

எங்க தீபாவளி நாளைக்கு…. இன்னைக்கு தான் வர்றேங்க. சீர் எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா… என்று கேட்டார்.

இல்ல சம்மந்தி…. அது வந்து, கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

நீங்க மாப்பிள்ளையையும் பொண்ணையும் தீபாவளிக்கு அனுப்பி வையுங்க… நாங்க எங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்து அனுப்பி வைக்கிறோம் என்று லட்சுமி கூறினாள்.

அவளது பேச்சை தடுத்த சம்மந்தி கவிதா…

அப்ப நீங்க இது வரைக்கும் மாப்பிள்ளைக்கு எதுவும் தீபாவளிக்கு வாங்கலை.

உங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் தான்.

ஒரு பொண்ணுக்கே உங்களால் சீர் செய்ய முடியலை.

நீங்க வசதியான இடத்தில் எதுக்கு சம்மந்தம் பண்ணனும்னு ஆசைப்பட்டேங்க… என்று தனது வாயில் வந்ததை பேசத் தொடங்கினாள்.

அவர் பேசிய வார்த்தைகளை தங்கத்தால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.

கண்களில் கண்ணீர் பொங்கியது. அவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு இல்ல சம்மந்தி…. இல்ல சம்மந்தி… என்ற அவரை சமாதானப் படுத்த முயற்சி எடுத்தார்.

பலன் அளிக்க வில்லை.

அப்போது காபி எடுத்துக்கிட்டு லட்சுமி வந்தாள்.

உடனே பேச்சை நிறுத்திய சம்மந்தி கவிதா….

லட்சுமியிடம்… உங்க அம்மாவுக்கு உனக்கு தீபாவளிக்கு சீர் எதுவும் கொடுக்க இப்ப முடியலையாம். பின்னாடி கொடுக்குறாங்களாம்.

இது என்ன கதைன்னு எனக்கு புரியலை லட்சுமி.

என் பையனுக்கு இது புரியாது, தெரியவாது. அவனுக்கு தெரியாமா? நாசுக்காக நடந்துக்கிட்டா எல்லாத்துக்கும் நல்லது.

உங்க அப்பா தலத் தீபாவளிக்கு என் பையனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தா நீ உங்க வீட்டுக்கு போ… இல்லாட்டி நீ இங்கேயே தலை தீபாவளியை கொண்டாடு.

யாராவது கேட்டா….. சீர் செய்ய அவங்களுக்கு வக்கு இல்லைன்னு நான் சொல்லிக்கிறேன் என்று கவிதா புலம்பினான்.

லட்சுமி தனது மாமியாரை எதிர்த்து எதுவும் பேச முடியவிலலை.

சம்மந்தி கவிதா அங்கிருந்த வேகமாக தனது அறைக்குள் சென்று விட்டாள்.

உடனே லட்சுமி, நீங்க எதுக்கு அம்மா… அவங்க கிட்ட பேசுனேங்க.

எங்க வீட்டுக்காரரு…. இன்னைக்கு காலையில் மீண்டும் உங்க அம்மா…. அப்பா ஏன் இன்னும் வரலைன்னு கேட்டாரு.

கிளம்பி வருவாங்க என்று சொன்னேன்.

ஏதாவது பிரச்சனையா…. என்னன்னு சொல்லு நான் வேணும்னா அவங்க கிட்ட பேசட்டுமா? என்று திரும்ப கேட்டார்.

அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுன்னு சமாளிச்சிட்டேன்.

அவரு ஆபீசுக்கு போயிருக்காரு. நான் அவருக்கு போன் பண்ணி நடந்த விபரத்தை சொல்லுறேன். அதுக்கு அப்புறம் அவர் என்ன சொல்லாறாரோ அதுபடி செய்யலாம்னு லட்சுமி கூறினாள்.

இல்லம்மா…. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… அவங்க அம்மாவே ஏதாவது சொல்லட்டும்.

நம்ம ஏதாவது சொன்னா… அவங்க அம்மா அப்புறம் சண்டைக்கு வர போறாங்க என்று தங்கம் தனது மகளுக்கு அறிவுரை கூறினார்.

ராமசாமி எதுவும் பேசாமல் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

இரவு முழுவதும் தனது மகளின் நினைப்புடன் தூங்காமல் இருந்தனர் ராமசாமியும் தங்கமும்.

பொழுது விடிந்தது. அதிகாலையிலே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க தொடங்கியது.

தலை தீபாவளிக்கு லட்சுமியும் – மருமகனும் வராததல் வீட்டு கதவை திறக்காமலே வைத்திருந்தாள் தங்கம்.

திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டது.

சரி பக்கத்து வீட்டுக்காரங்க யாரோ கதவை தட்டுறாங்கன்னு நினைத்துக் கொண்டு தங்கம் மெதுவாக கதவை திறந்தாள்.

கதவை திறந்ததும்…. அவள் கண்ணை அவளால் நம்ம முடியவில்லை.

வாசலில் அவளது மகள் லட்சுமியும் மருமகன் வரதனும் நின்று கொண்டிருந்தனர்.

தங்கம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

என்னங்க…. இங்க வாங்க…. தம்பி மதன் இங்க வாடா… யாரு வந்திருக்காங்க பாரு…

என்னங்க நம்ம லட்சுமியும் மாப்பிள்ளையும் வந்திருாங்க என்று மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தங்கம்,

வாங்க மாப்பிள்ளை… வா லட்சுமி என்று கண்கள் கலங்கியபடி, வாய் நிறைய சிரிப்புடன் அவர்களை வரவேற்றார்.

வீட்டுக்குள் இருந்த ராமசாமியும் மகன் மதனும் வேகமாக வந்து லட்சுமியையும் அவளது கணவரையும் வரவேற்றனர்.

ராமசாமியும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றார். என்ன செய்வதென்று புரியாமல் அங்கும் இங்கும் ஓடினார்.

அதன் பின் தன் மருமகனின் கையைப்பிடித்து ரொம்ப நன்றி மாப்பிள்ளை என்று கூறினார் ராமசாமி.

தங்கம், தனது மகள் லட்சுமியை தனியாக அழைத்துச் சென்று என்ன நடந்தது என்று கேட்டாள்.

லட்சுமி நடந்த விபரத்தை கூறினாள்.

நேற்று இரவு என் கணவர் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தார்.

அவரிடம் அவங்க அம்மா, தீபாவளியை நீ இங்கேயே கொண்டாடு. உன் மாமியார் வீட்டுக்கு போக வேண்டாம் என்று கூறினார்.

எதுக்குன்னு கேட்டாரு….

அதெல்லாம் உனக்கு புரியாது. நான் சொல்வதை செய் என்று கூறினார்.

தனது அம்மா கூறியதன் அர்த்தம் அவருக்கு புரியவில்லை.

சரி என்று கூறிவிட்டு எங்களது அறைக்குள் வந்து என்ன நடந்தது என்று கேட்டார்.

நான் முதலில் நடந்ததை கூறவில்லை. சமாளித்து பார்த்தேன்.

ஆனால் அவர் விடுவதாக இல்லை. என்ன நடந்தது உண்மையை கூற என்று கேட்டார்.

நானும் நடந்த எல்லாவற்றையும் அப்படியே கூறிவிட்டேன்.

அவர் அதை கேட்டவுடன் இதை ஏன் ஆரம்பத்திலேயே சொல்லவில்லை என்று என்னை கண்டித்தார்.

உங்க அம்மா தப்பா நினைப்பாங்கன்னு தான் நான் சொல்லவில்லை என்று கூறினேன்.

உடனே என்னை அவங்க அம்மாவின் அறைக்கு அழைத்துச் சென்று, இனிமேல் என்னை கேட்காமல் என் மாமியார் வீட்டில் எதுவும் கேட்கவோ, வாங்கவோ கூடாது.

எனக்கு நீங்கள் வேறு, அவங்க வேறு கிடையாது.

என் மனைவியோட அம்மா, அப்பா எனக்கும் முக்கியம். இதுவரைக்கும் நடந்தது நடந்ததா இருக்கட்டும். இனிமேல் இது போல் நடக்கக்கூடாது என்று தனது அம்மாவை கண்டித்துக் கொண்டார்.

உடனே நான் உங்களுக்கு போன் மூலம் நடந்ததை கூறலாம் என்றேன்.

ஆனால் அவர் வேண்டாம் நாம் நாளைக்கு காலையில் நேரிலேயே செல்வோம் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து நாங்கள் இரண்டு பேரும் கடைக்கு சென்று உங்களுக்கும், தம்பிக்கும் புத்தாடை வாங்கினோம் என்று தான் கையோடு எடுத்து வந்த பையில் இருந்த ஆடைகளை தனது தாயிடம் கொடுத்தாள்.

அதை பார்த்த தங்கத்தின் கண்ணில் கண்ணீர் கொட்டியது.

தனது மகளின் கைப்பிடித்து அழுதாள் தங்கம்.

தனது அக்காவின் கையிலிருந்த பையை பறித்துக் கொண்டு வேகமாக சென்ற தம்பி மதன் அதில் இருந்த தனது ஆடையை எடுத்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

அதில் இருந்த பட்டாசுகளை எடுத்து தனது தந்தையிடம் காட்டி மகிழ்ந்தான்.

தங்கம் வேகமாக வேகமாக தீபாவளி பலகாரங்களை செய்யத் தொடங்கினாள்.

ராமசாமி தனது மருமகன் குளிப்பதற்கு எண்ணெய் எடுத்துக் கொடுத்தார்.

அனைவரும் குளித்து புத்தாண்டை அணிந்து சாமி கும்பிட்டு தீபாவளி பலகாரங்களை எடுத்து சாப்பிட்டனர்.

லட்சுமியும் – வரதனும் தங்களது தலை தீபாவளியை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் சிறப்பாக கொண்டாடினர்.

ராமசாமியும் அவரது மனைவி தங்கமும் ஆனந்த கண்ணீருடன் அதனை ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *