செய்திகள்

தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது

சென்னை, மே.16-–

தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்ட சென்னையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ஆதரவாக சிலர் இந்தியாவில் செயல்படுவதாகவும், குறிப்பாக தென் மாநிலங்களில் அவர்கள் ஊடுருவி இருப்பதாகவும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், தென் மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை என்.ஐ.ஏ. போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த கண்காணிப்பு வலை யில் ஜாகீர் உசேன் என்ற உளவாளி என்.ஐ.ஏ. போலீசாரிடம் சிக்கினார். சென்னை திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதியில் தங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார்.

இலங்கையை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி துணி வியாபாரம் செய்வது போல் நடித்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்தார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள் போன்றவற்றை புகைப்படம் எடுத்து அது தொடர்பான தகவல் களையும் திரட்டி பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்ததாக ஜாகீர் உசேன் மீது குற்றம் சுமர்த்தப்பட்டது.

ஜாகீர் உசேன் கொடுத்த தகவல் அடிப்படையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரபீக், முகமது சலீம், சிவபாலன் ஆகிய மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அப்போது கைது செய்தனர். இவர்கள் உளவு பார்த்தது மட்டு மில்லாமல் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இந்திய கள்ள நோட்டுகளையும் தமிழகத்தில் புழக்கத்திற்கு விட்டதும் தெரியவந்தது.

இலங்கை தலைநகரம் கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அமீர் சுபேர் சித்திக் என்பவர் மேற்கண்ட உளவாளிகளுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டதும் தெரியவந்தது. இந்த உளவு பார்த்த வழக்கில் அமீர் சுபேர் சித்திக்கும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கைதானவர்கள் மீது சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு என்.ஐ.ஏ. போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வியாசர்பாடியை சேர்ந்த ரபீக் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வந்த அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். அவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால், அவரை என்.ஐ.ஏ. போலீசார் தேடி வந்தனர்.

ரபீக் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ. போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், ரபீக் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அவரை என்.ஐ.ஏ. போலீசார் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *