சுந்தரம் ஜாதகம் பார்த்தால் ஒரு துளி தப்பாது. அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடக்கும் என்று ஊருக்குள் அப்படி ஒரு பேர் இருந்தது.
சுந்தரம் ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்கள் . எல்லாம் இன்று ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜாதகப் புத்தகத்தை எடுத்து நெற்றியைச் சுருக்கி, அதிலிருப்பவைகளை எல்லாம் உள்வாங்கி ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை ஒப்பிட்டு சொல்லும் அழகே அழகு படைத்தவனே சொல்வது போல் இருக்கும்.
தமிழ்நாடு மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்கள் எல்லாம் சுந்தரத்திடம் ஜாதகம் பார்ப்பார்கள். ஏன் ஆன்லைனில் கூட ஜாதகம் பார்த்திருக்கிறார்.
வீடியோ காலில் ஜாதகம் பார்க்கிறார். வாட்ஸ் அப்பில் ஜாதகம் கணித்து அனுப்புகிறார். டெக்னாலஜி வளர்ந்து விட்டதால் என்னென்ன தேவையோ அந்தந்த வடிவத்தில் ஜாதகம் பார்த்து அனுப்புவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார் சுந்தரம். முதலில் பணத்தைப் பெரிதாக நினைக்காத சுந்தரம் போகப் போக அதைப் பெரிய தொழிலாக மாற்றி விட்டார். ஜாதகம் பார்ப்பதற்கு இவ்வளவு. ஜாதகம் எழுதித் தருவதற்கு இவ்வளவு. ஜோடி பொருத்தம் பார்க்க இவ்வளவு. திருமணப் பொருத்தம் பார்க்க இவ்வளவு ” என்று பலசரக்குக் கடையில் உள்ள பொருட்கள் விலையை எழுதி வைப்பது போல எழுதி வைத்திருந்தார், சுந்தரம்
” ஐயா கொஞ்சம் கட்டணம் குறைச்சுக்கலாமா? ” என்று யாராவது கேட்டால்
“என்னங்க. எது எதுக்கோ செலவு பண்றீங்க. இது வாழ்க்கை. இதுக்கு செலவு பண்றதுக்கு யோசிக்க கூடாது. இது எனக்கு தரக்கூடிய கட்டணமில்ல. கடவுளுக்கு தரக்கூடிய தட்சணை அப்படி நினைச்சிங்கன்னா, உங்களுக்கு அது பெருசா தோணாது. நான் ஒரு ஜாதகத்தை எடுத்து படிச்சுப் பார்த்து சொன்னேன்னா பத்து பொருத்தமும் பக்குன்னு பத்திக்கும் .அது மட்டுமில்ல .எத்தனையோ பேருக்கு நான் இலவசமாக ஜாதகம் பாத்திருக்கேன். இலவசமா பண்றது எதுவும் சரியா இருக்காது. அப்படிங்கிறதுக்காகத்தான் சின்னதா ஒரு கட்டணம் சொல்றேன்” என்று தன் பக்கமுள்ள நியாயத்தை சொல்வார் , சுந்தரம்
இப்படி பல ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதகம் பார்த்து வந்த சுந்தரத்தின் மகளுக்கு திருமணம் நடந்தது. ஊருக்கே ஜாதகம் பார்த்து உபதேசம் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிற சுந்தரம் தன் மகளுடைய ஜாதகத்தை உத்து உத்து பார்த்திருப்பார் .சரியான இடத்தில் தான் மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுத்திருப்பார்
என்று ஊரிலிருந்தவர்கள் எல்லாம் பேசிக் கொண்டார்கள் .
“ஊருக்கே ஜாதகம் பாக்குற நீங்க உங்க பொண்ணுக்கு ஏகப் பொருத்தம் பாத்து சிம்மாசனத்தில ஏறி வாழ்ற மாதிரி வாழ்க்கைய தான் பாத்திருப்பீங்க “
என்று சுந்தரத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் சொல்ல,
சுந்தரம் மகளின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது .
திருமணம் நடந்த ஒரு வாரத்தில்
“அப்பா என் புருசன எனக்கு பிடிக்கல. “
.அழுது கொண்டே சொன்னாள் சுந்தரத்தின் மகள்.
” ஏன் ? ஏன் பிடிக்கல? ” பதறினார் சுந்தரம்
” விளக்கம் எல்லாம் சொல்ல முடியாதுப்பா. எனக்குப் பிடிக்கல” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னாள் சுந்தரத்தின் மகள்.
” என்னாச்சும்மா. ஏன் இப்படி சொல்ற?”
” அப்பா பிடிக்கலைன்னா பிடிக்கல. எனக்கு விவகாரத்து வாங்கித் தாங்க “
அமுதாள்.
” என்னம்மா சொல்ற? எத்தனையோ பேருக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச என்கிட்ட என் மகள் பேசுற பேச்சா இது” என்று மகளிடம் கெஞ்சினார், சுந்தரம்.
” அப்பா நீங்க பாக்கிறது ஜாதகம் பேப்பரில் எழுதி வச்சது .ஆனா, என் மனச நீங்க படிக்கலப்பா. ஒவ்வொரு மனுச மனசையும் யாராலும் படிக்க முடியாது .எனக்கு விவகாரத்து வாங்கி குடுங்க இல்லன்னா. நான் தற்கொலை பண்றத தவிர வேற வழியில்லப்பா “
என்று பயமுறுத்தினாள் , சுந்தரம் மகள்.
எத்தனையோ பேருக்குத் திருமணப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்த சுந்தரம், தன் மகளுக்கு விவகாரத்துப் பத்திரம் எழுதினார்.