நாடும் நடப்பும்

தலிபான் ஆட்சி ஆப்கானிஸ்தானில் மாறும் காட்சிகள்


ஆர்.முத்துக்குமார்


சமீபமாய் தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் பல விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்றை தெளிவாக சுட்டிக்காட்டுவது என்னவென்றால் தலிபான் ஆட்சி ஓரளவு நிரந்தரமாக ஆப்கானிஸ்தானில் இருக்கப் போகிறது!

உலகெங்கும் உள்ள ஜனநாயக குடியரசுகளின் அதிகாரத்தில் ஆட்சி செய்பவர்கள் மாறிவிடும் காட்சியே நிரந்தரமாக இருப்பதை உணர்ந்து வருகிறோம். ஆனால் ஆப்கானிலோ வேகமாக மாறி வரும் காட்சிகளிடையே தலிபான்கள் நீண்டகால ஆட்சி செய்ய போகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகி வருகிறது.

இது மத்திய, தெற்காசிய பகுதி நாடுகளுக்கு புது சவால் என்பது தான் உண்மை. இந்த வார துவக்கத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் தெற்காசிய நாடுகளில் தனது முதல் அதிகாரப்பூர்வ சுற்றுப் பயணத்தை துவக்கினார்.

அமெரிக்காவின் நேச நாடான சிங்கப்பூரிலும் இந்தோனேசியாவிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு கமலா ஹாரீசுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் இருக்கவில்லை. சென்ற இடங்களில் எல்லாம் பொது கேள்விகள் ஏதும் எழவேயில்லை. எல்லாமே ஆப்கானில் அமெரிக்காவின் வாபஸ் பற்றியும் இப்படி திடீரென விலகுவதால் கட்டுப்படுத்தப்பட்ட தலிபான்கள் மீண்டும் முழு சக்தியுடன் அதுவும் மிகக்குறுகிய 2 வாரங்களிலேயே ஆட்சியை பிடிக்கும் வல்லமையுடன் வந்து விட்டனரே? அது எப்படி? என்று கேட்டு வருகிறார்கள்.

முன்பு 1996 வாக்கில் சோவியத் ரஷ்யா ஆப்கானில் இருந்து வெளியேறிய 2 வருடங்களுக்கு பிறகு தான் தலிபான்கள் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

இம்முறை சில மாதங்களில் ஆட்சியை பிடித்து விட்டனர். ஆட்சியாளர்களை வெளியேற்றி விட்டனர்.

அவர்களில் யாரேனும் நாட்டிலேயே இருக்க முடிவு செய்தால் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு தருவோம் என்றும் கூறி வருகிறார்கள்.

உண்மையில் தலிபான்கள் தீவிரவாதிகளா? அல்லது நாட்டை பிடித்துக் கொண்டு சுய சட்ட விதிகளை அமைத்து சர்வாதிகார ஆட்சி செய்வார்களா?

எங்கள் சித்தாந்தம் இஸ்லாமியர்கள் போற்றும் சரியா சட்டவிதிகள் படி ஆட்சி செய்வதும் முறையாக வாழ்வதும் தான் என்கிறார்கள்.

( ‘சரியா ’ என்றால் அரபு மொழியில் சட்டம் என்று பொருள். இசுலாமிய சட்டமுறை அல்லது சரியா சட்டம் என்று பொருள் ; அனைத்துலக ஒலிப்பு முறை [பரியா) எனப்படும். இசுலாமிய மதத்தைப் பின்பற்றுவோரின் இசுலாமிய வழக்கப்படி அல்லது சட்டப்படியான வாழ்முறை என்பதைக் குறிக்கும்.)

இந்த ‘சரியா ’ சட்டப்படி வழி நடத்தப்படும் கிட்டத்தட்ட 15 நாடுகள் உண்டு. அதில் 20 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாடுகள் இந்தோனேசியா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளாகும். அடுத்த முக்கிய நாடுகள் பட்டியலில் எகிப்து, ஈரான், ஈராக், சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், மாலத்தீவுகள் இருக்கிறது.

அந்தப் பட்டியலில் உள்ள பாகிஸ்தானை தவிர இதர‘சரியா ’ சரத்துக்கள் படி ஆட்சி நடைபெறும் அனைத்து நாடுகளுடனும் நாம் நல்லுறவு வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நம்நாட்டு இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தவர்கள் குறிப்பாக இந்துக்கள் அரபு நாடுகளில் சவுதிஅரேபியாவிலும் மலேசியாவிலும் வேலை செய்து கொண்டிருப்பதை அறிவோம்.

அந்த வரிசையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்‘சரியா ’ சட்டப்படி ஆட்சி செய்ய வேண்டி வரும் நிலையில் அவர்களை ஆதரிப்பதா? தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதா? என்று தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஷரியா சட்டப்படி செயல்படும் நாடுகளில் மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு உரிமைகள் அதிகம் கிடையாது, அடக்கப்பட்ட வாழ்க்கை முறையில் கட்டுண்டு இருக்கிறார்கள். அங்கெல்லாம் ஆடை அணிவதில், தெருவில் செல்வது, கல்விக்கூடம் செல்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்று எல்லாவற்றிலும் கட்டப்பாடுகள் உள்ளது.

ஆண்களோ, பெண்களோ தவறு செய்தால் குறைந்தபட்ச தண்டனைகளில் கல் எறிந்து காயப்படுத்துவது, கையை துண்டித்து விடுவது முதல் பொது இடத்தில் அடித்து, துக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவது வரை இருக்கிறது.

அந்த கடும் விதிகளால் குற்றங்கள் அறவே கிடையாது. ஆனால் மதத் தலைவர்கள் எதைச் செய்தாலும் யாராலும் தட்டிக் கேட்கவோ, தண்டிக்கவோ சட்டப்படி இடம் கிடையாது.

அமெரிக்கா, பிரிட்டன் உட்பட நேட்டோ நாடுகள் இந்த கலாச்சார அடக்குமுறையை வெறுப்பதாகவும் மனித உரிமை மீறல்களை கண்டித்தே ராணுவ நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறுவார்கள்.

ஆனால் சவுதிஅரேபியாவில் அமெரிக்க கூட்டணியின் நிலைப்பாடு வேறு விதமாக இருக்கிறதே? அங்கு ஏன் ராணுவ எச்சரிக்கையோ, கட்டுப்படுத்தும் முயற்சிகளோ எடுக்க தயக்கம்? என்று கேட்கும் முன் நமக்கு கண் முன் வரும் பதில் ‘கச்சா எண்ணெய்’ .

ஆக பெட்ரோல் வளம் இருக்கும் நாடுகளுடன் உறவுக்கு ஒரு நிலைப்பாடு, ஆனால் எந்த வளமும் இல்லா ஆப்கான் போன்ற பிரதேசத்தில் வேறு நிலைப்பாடு? அதுவும் ரஷ்யா, சீனா தலையீட்டை தடுக்கவும் ஆசியாவின் வர்த்தக பொருளாதாரத்தில் தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்தவும் என்று இருப்பதை மறுக்கவா முடியும்?

இதையெல்லாம் பற்றி தீவிரமாக ஆலோசனை செய்து தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆப்கானில் இருந்து வெளியேற முடிவு செய்தோமா?

சீனா, ரஷ்யா நாடுகளின் தூதரக செயல்பாடுகள் இன்றும் ஆப்கானில் தொடர்கிறது.

பாகிஸ்தான், ஈரான் நாடுகளின் ராணுவ ஆட்சியாளர்கள் தலிபானின் கூட்டாளிகள் போல் தானே செயல்பட்டு கொண்டும் இருக்கிறார்கள்.

ஆக சிக்கல் நிறைந்த முட்புதராக இருந்த ஆப்கானில் இருந்து வெளியேறிவிட்டோம். அங்கு ஆட்சியில் அமர இருக்கும் தலிபான்களிடம் இருந்தும் பிரிந்து சென்று வருகிறோம்.

இந்த முடிவின் பின்னணியில் அமெரிக்க உத்தரவுகளும் இருந்ததா? அல்லது நாமே அமெரிக்கர்கள் போல் வெளியேறினோமா? என்பது விவாதத்துக்குரியது. சரியான பதிலை பெற முடியாத விடுகதையும் தான்.

ஆனால் தலிபான்களிடம் வெளிவந்து விட்ட நம்மால் மீண்டும் உறவுகளை புதுப்பித்துக் கொள்ள வழியின்றி இருப்பதால் நமக்கு நன்மையா? அமெரிக்காவின் உதவிகள் உண்மையில் நமக்கு அதனால் கிடைக்குமா? என்பதையெல்லாம் விரைவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆனால் ரஷ்யாவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த தயாராகிவிட்ட நிலையில் ஆப்கானில் நமது அரசியல் வியூகம் தவறானதா? என்ற கேள்வியும் எழுகிறது. அதனால் சந்திக்க இருக்கும் பல்வேறு பின்விளைவுகளை காலம் தான் நமக்கு பரிசாக தர இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *