செய்திகள்

தலிபான்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் சகோதரர் அறிக்கை

புதிய ஆட்சி கட்டமைப்புக்கு ஆயத்தம்

காபூல், ஆக. 21–

தலிபான்களுக்கு ஆதரவளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமதுசாய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஆட்சியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமதுசாய், தலிபான்களின் தலைவர் கலீல்-உர்-ரஹ்மான் மற்றும் மதத் தலைவர் முப்தி மஹ்மூத் ஜாகிர் முன்னிலையில், தலிபான்களின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சி கட்டமைப்பு

அடுத்த சில வாரங்களில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்கான புதிய ஆட்சியை அமைப்பதற்கான கட்டமைப்பை வெளியிட இருப்பதாக இஸ்லாமிய இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்காக, “தலிபானில் உள்ள சட்ட, மத மற்றும் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலை தலிபான்கள் சுற்றி வளைத்ததையடுத்து அஷ்ரஃப் கனி (வயது 72) தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.

பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து அஷ்ரப் கனி வெளியிட்ட முகநூல் விடியோவில், ‘ரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகவே’ காபூலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் எனது உயிருக்கு ஆபத்திருப்பதாக எனது பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியதுடன், உடனே நாட்டை வெளியேறுமாறு ஆலோசனை வழங்கியதை அடுத்தே, விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினேன் என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *