சிறுகதை

தற்பெருமை – ராஜா செல்லமுத்து

அலுவலகத்தில் வேலை செய்யும் லாரன்ஸைப் பார்த்தால் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஒருவிதமான அதிர்ச்சி ஏற்படும்.

லாரன்ஸ் தன்னைப்பற்றி பேசுவதிலேயே குறியாக இருப்பார். அவர் எதற்கும் இனிமையானவர் தான்; ஆனால் அவர் செய்கை சரியில்லை என்பது அந்த அலு வலகத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும்; அதனால்தான் லாரன்சை பார்த்ததும் அப்படி ஓடுவார்கள்.

லாரன்ஸ் கெட்டவனும் இல்லை; மற்றவர்களுக்குத் தீங்கு இழைப்பனும் கிடையாது. ஆனால் தன்னைப் பற்றியே பேசிக் கொள்வதில் வல்லவர் என்பதால் அது பிறருக்கு பிடிக்காமல் போய் இருப்பது நியாயம்தான். அதனால்தான் லாரன்ஸை கண்டதும் ஓடுவார்கள்.

தன்னுடைய பெருமைகளை தான் செய்த செயல்களை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார் லாரன்ஸ். எங்கு நின்றாலும் எது பேசினாலும் எப்போது பேசினாலும் தன்னிடம் அப்படி இருக்கிறது, தன்னிடம் இப்படி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால் லாரன்சை பார்ப்பவர்கள் தலை தெறிக்க ஓடுவார்கள்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் ஒருநாள் லாரன்ஸ் அலுவலகத்தில் இல்லாத நேரம் பார்த்து லாரன்சை ஒருவர் தேடி வந்தார்.

அப்போது அலுவலக நண்பர் ராசு லாரன்ஸ் இல்லை என்று சொன்னார்

நீங்க நாளைக்கு வந்தா லாரன்ஸ் ஆபீஸ்ல பார்க்கலாம்; இன்னிக்கு அவர் லீவு என்று சொன்னார் .

வந்தவர் லாரென்ஸ் பற்றி கேட்டார் :

அலுவலகத்தில் இருந்தவர்கள் லாரன்ஸை பற்றி என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்; ராசுவும் விழித்தார்.

இல்லைங்க லாரன்ஸ் ரொம்ப நல்லவர்; எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார் . மத்தவங்களுக்கு தீங்கு நினைக்காதவர். அவருடன் இங்கே ஒரு வேலையை கொடுத்தீங்கன்னா ரொம்ப சிறப்பா செய்வார்; அவர மாதிரி ஒரு ஆளை நீங்க பார்க்க முடியாது.

அதனால தைரியமா அவர் கிட்ட நீங்க உங்க வேலைய ஒப்படைக்கலாம்; செய்து முடித்து விடுவார் என்று வந்தவரிடம் ராசு சொல்ல

அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.

ஏன் இப்படி சொன்ன? அவந்தான் எப்ப பாத்தாலும் சுய தம்பட்டம் அடித்துக்கொண்டு இருப்பானே? அந்த ஆளப் போயி இப்படி சொல்லிட்டே, நாளைக்கு ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்றது? என்று கேட்டார்.

அவன் தான் அறிவில்லாம பேசுறான்னா. நாம அவனப் பற்றி தப்பா சொல்லக்கூடாது. அவனுக்கு இதன் மூலமா ஏதாவது ஒரு நல்லது நடந்தா அதப் பார்த்து இன்னும் சந்தோஷப்படணும்.

எப்போதுமே ஒரு மனிதன் இல்லாத நேரத்தில அவங்களப் பத்தி சரியா தான் சொல்லணும்.

ஏன்னா அது அவங்களுக்கு நல்லதா அமையலாம் என்று ராசு சொல்ல அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.

மறுநாள் ராசுவைப் பார்க்க வந்தார் லாரன்ஸ்.

ராசுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். நான் என்னப்பத்தி தற்பெருமை தானே பேசியிருக்கேன். ஆனா நீங்க நான் இல்லாத நேரம் என்ன தவறா பேசல. நன்றி என்று சொன்னார்.

அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி சொன்னார்

அன்றிலிருந்து, அவர் தன்னைப் பற்றி வாயே திறப்பதில்லை.

ராஜா செல்லமுத்துவின் பிற கதைகள்:

வேவு

என்ன பார்வை

பெருகும் அன்பு

புதிர்

கொலைக் கைதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *