செய்திகள்

தற்கொலை எண்ணங்களை துடைத்து எறிந்திடும் வழிகள்

காதலை எதிர்த்ததால், நுண்கலை மாணவி தற்கொலை; கொடுத்த கடனை பலரும் திருப்பித் தராததால், கடன் கொடுத்தவர் தற்கொலை; கணித பரீட்சையில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் தற்கொலை. இப்படிப் பல காரணங்களால் தற்கொலை நிகழ்வுகள் அன்றாடம் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

தற்கொலை கோழைத்தனம்

தற்கொலை என்பது மிகவும் கோழைத்தனமான செயல் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், கோழைத்தனம் என்று அறிந்தும், தற்கொலை செய்வோரின் எண்ணிக்கைதான் குறைந்தபாடில்லை.

தற்கொலை முயற்சிகள், பொதுவாக தனி நபர் தானாக விரும்பி மேற்கொள்ளும் துயர நிகழ்வாகும். இம்முயற்சிகள் இருவகைப்படும். ஒன்று, தனது உடலில் சேதம் மேற்கொள்வது; மற்றொன்று, கெமிக்கல் போன்றவற்றின் மூலம் மூக்கு மற்றும் நுரையீரல் வழியாக ஓடும் மூச்சுக்காற்று மற்றும் உடல் நரம்புகளுக்கு (cellular respiration) துயரம் விளைவிக்கும் செயல்கள்.

வாழ்க்கையில் அவமானம், துக்கம், சோதனை நேர்ந்தால், தற்கொலை செய்து கொள்வது தான் தீர்வு என்றால் இந்நேரம் இந்த பூவுலகம் பிண மனைக ளாக அல்லவா மாறி இருக்கவேண்டும்?

அடுத்தமுறை யாராவது, ” எனக்கு வாழப் பிடிக்கவில்லை “(I don’t want to live), “வீட்டுக்கும், உலகிற்கும் நான் பாரம்”, “நான் உபயோகம் அற்றவன்” என்று கூறக் கேட்டால், “ஏதோ உளறுகிறான், இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடான வெள்ளந்தி சொற்கள், சிறிது நாளானால் சரியாகி விடும்” என்று எண்ணி, இவர்களை மூலையில் உட்காரச் செய்து விடாதீர்கள்.

நேர்மறைத் தீர்வுகள்

தற்கொலை முயற்சிகளிலிருந்து தப்ப வைக்க, குறித்த நேரத்தில் அம்முயற்சி மேற்கொள்ளுபவரைக் கண்டறிதல், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து வாடியிருப்போரை விட்டு விலகாமால் ஆதரவாய் இருந்து, நேர்மறை எண்ணங்களை அவர்கள் மனதில் விதைத்தல், தற்கொலை எண்ணங்களை நசுக்கும் முயற்சியில் சிகிச்சைக்கு சரியான வழி காட்டுதல், உளவியல் வல்லுனரை நாடி, நிரந்தரத் தீர்வு காணல். தற்கொலை பற்றிய விழிப்புணர்வை சமூக அளவில் மேற்கொள்ளுதல் என்று, நம் கண் முன்னே பல தீர்வுகள் விரிந்திருக்கின்றன.

மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தம்மை மோசமாக நடத்தும் வெளிப்புறக் காரணிகளை சட்ட ரீதியாக சந்தித்து, குற்றம் செய்தோரை தண்டனை வாங்கி கொடுக்கும் பல அம்சங்கள், நீதித் துறையில் விரவிக் கிடக்கும்போது, விலை மதிப்பில்லாத உயிரை மாய்த்துக் கொள்வது, அறவே ஒழிக்கப்படவேண்டிய செயல். அவர்களை வாழ்க்கையில் வெற்றி பெறப் பாடுபடுவது அவர்களை சுற்றியுள்ள நம் கைகளில் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

மனதின் விரிதிறன்

‘Resilience’ என்கின்ற ஆங்கில சொல்லுக்கு, விரிதிறன், அழுத்தத்தில் இருந்து மீளுதல், மீண்டெழுதல் என்பது பொருள். இந்த சொற்களின் முழு எடுத்தக்காட்டு வடிவமாக இருப்பவர்கள், நமது வீட்டுப் பெரியவர்கள்தான். ஏழெட்டு பிள்ளைகளை பெற்ற அவர்கள், வாழ்க்கையில் காணாத சோதனைகளா? அடுத்த வேலை உணவு என்று நினைத்தாலே பூகம்பமாக தெரியும், அந்த அளவுக்கு வறுமை.

தண்ணீர் எடுக்க சில மைல்கள் தினசரி நடக்க வேண்டும். பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க மேற்கொண்ட மேற்கொண்ட முயற்சிகள், இப்படிப் பல சீற்றங்களை சந்தித்தவர்கள் – இவ்வளவு தடைக்கற்களை சந்தித்து, இன்றளவும் நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

உளவியல் ரீதியிலான ‘Resilience’ என்னும் மீண்டெழும் ஆற்றல், விரித்திறன் ஆகியவை நம்முள்ளே உறங்கியிருக்கும் (ஒரு பந்தை தரையில் தட்டினால், அது மீண்டும் மேலே எழுவது போல்) இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ப்ளூ வேல் சாலஞ்ச் ( Blue Whale challenge) போன்ற எப்படிப்பட்ட சவால்களையும் இதன் மூலம் சமாளிக்க முடியும்.

எண்ணங்களுக்கு அதிபதி

நம் எண்ணங்களுக்கு நாம்தானே அதிபதி. அவற்றை நாமேதான் தீர்மானிக்கிறோம். நமக்கு எவை தேவையோ, அவற்றைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கற்றுக்கொள்ளப் பழக வேண்டும். குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது என்று உபதேசித்த ஜென் கதையில் கூட, அறிவுரை கேட்டு வந்த ஒருவரிடம் குரங்கைப் பற்றியே ஒருநாள் முழுவதும் நினைத்திருந்த காரணத்தால், அவனுக்கு எதிர்மறை எண்ணத்தை உருவாக்கி அவனது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டதை கூறுகிறார்.

நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, எந்த நிகழ்வையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள போதனை செய்கிறார் சென். இக்கட்டுரையைப் படித்து முடிக்கும் பொழுது, மாணவரோ மற்றவரோ – நேர்மறை எண்ணங்களை இன்றிலிருந்து வளர்க்கப் பழக வேண்டும் என்று விரும்பினால், அதுவே வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி.

நமக்கும் பொறுப்பு

சமுதாய ரீதியாகச் சொல்லப்போனால், தற்கொலைச் சிந்தனைகள், நிகழ்வுகள் இவற்றைத் தடுக்கும் முயற்சியில், நம் அனைவருக்குமே பொறுப்புக்கள் உண்டு. தற்கொலை போன்ற எதிர்மறை எண்ணங்களை களைந்து, பெரு மகிழ்ச்சியுடன் மீண்டுவரும் நபரின் ,”சாதிக்கப் பொறந்தோம் நாம் ” என்கிற புன்னகை, நமக்கு ஏற்படுத்தும் உளநிறைவு நிகழ்வையும், அந்த வெற்றிக்குப் பின்னணியில் நாம் மேற்கொண்ட ஆளுமை முயற்சிகளின் வீரியத்தையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இவை எல்லாவற்றையும் தாண்டி, நாம் ஒன்றை சிந்தித்து பார்க்க வேண்டியது நமது அறிவார்ந்த செயல். ஆம், 6 அறிவுக்கு குறைந்த எந்த உயிரினமாவது, வாழ்வில் அடையும் எந்த துயரத்திற்காவது, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதா? அப்படியாயின், பகுத்தறிய தெரிந்த மனிதன், தற்கொலை முடிவை எடுப்பது, அவன் பெற்றுள்ள அறிவாற்றலுக்கு இழுக்கு என்பதை அறிய வேண்டாமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கருத்துகளுக்கான மின்னஞ்சல் முகவரி saishogai@yahoo.co.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *