செய்திகள்

தர்மபுரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது 3 லாரிகள் மோதல்: 2 பேர் பலி; 14 பேர் படுகாயம்

தர்மபுரி, செப். 14–

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தர்மபுரியில் இருந்து கழிவு நீர் சுத்திகரிப்பு லாரி ஒன்று நேற்று நள்ளிரவு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொப்பூர் புதூர் அருகே சென்றபோது அந்த லாரி திடீரென பழுதாகி சாலையின் ஓரத்தில் நின்றது. அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்திற்கு கற்கள் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த கழிவு நீர் லாரி மீது மோதியது.

இந்த நிலையில் இதனை கவனிக்காமல் குஜராத்தில் இருந்து அவினாசிக்கு உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி ஒன்று, கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இதனையடுத்து பின்னால் வந்த மற்றொரு லாரியும் உருளைக் கிழங்கு லாரி மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ரத்தினவேல், சேலம் மாவட்டம் எட்டிமாங்குறிச்சியை சேர்ந்த சித்தையன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் கழிவு நீர் லாரியில் இருந்த 12 தொழிலாளர்களும் மற்ற 2 லாரிகளின் ஓட்டுநர்களும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தர்மபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் சுமார் 4 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூர் போலீசார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி பணியாளர்கள் இணைந்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *