சிறுகதை

தர்ப்பூசணி- ராஜா செல்லமுத்து

உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் மத்தியான வேளையில் சாலிகிராமத்தில், வந்த வேலையை முடித்துவிட்டு சொந்த அலுவலகத்திற்கு செல்லத் தயாராக நின்று கொண்டிருந்தான் பரணி .

அவன் நின்ற திசையில் இருந்து அவன் அலுவலகம் செல்லும் திசைக்கு எந்தப் பேருந்தும் வந்த பாடு இல்லை .அவன் நிற்கும் போது நடுவானில் இருந்த சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி இறங்கத் தொடங்கியது அவன் அவனைச் சுற்றி இன்னும் நிறைய பேர் வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பேருந்து நிறுத்தத்தில் வெயில் என்றும் பாராமல் ஒரு வயதான பெரியவர்,தன்மீது வெயில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக கையில் உள்ள ஒரு கம்பை தாங்கிப் பிடித்து, அதில் துணியை கட்டி இருந்தார் .அந்த துணியின் நிழலில் அமர்ந்திருந்த பெரியவர் பேருந்துக்காக வெயிலில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டார்.

பயணிகளின் இருக்கையை பிடித்து அமர்ந்து விட்டோம் என்ற வருத்தம் அவருக்கு இல்லை. காரணம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வெளிச்சம் விழா போல விழுந்து கொண்டிருந்தது. அதனால் அவர் யாரையும் தண்டித்ததாக நினைத்துக் கொள்ளவில்லை .

அந்தப் பெரியவரே கொஞ்சம் வருத்தப்பட்டு தான் சொன்னார். இது என்ன தலைநகரா? கிராமமா? இவ்வளவு நேரமா நின்னுட்டு இருக்கீங்க .ஒரு பஸ் இல்ல. எந்த ஆட்சி மாறினாலும். ஏழைகளுடைய காட்சி மட்டும் மாறாம அப்படியே தான் இருக்கு என்று அந்த வறுமையிலும் வற்றாத அரசியல் பேசினார்.

அங்கு நின்று கொண்டிருந்த பரணிக்குச் சற்று கோபம் வந்தது. பேருந்து புகார் எண்ணுக்கு போன் செய்தான் .

என்ன சார் இது சாலிகிராமத்தில இருந்து பஸ் இருக்கா? இல்லையா ? கடுமையான வெயிலா இருக்கு .ஒரு மணி நேரத்துக்கு மேல நிக்கிறோம். ஒரு பஸ்ஸும் இல்லையே? என்று சொல்ல

எதிர் திசையில் இருந்த பேருந்துப் புகார் அலுவலர்

கண்டிப்பா வரும் சார் என்று ஒற்றை வார்த்தையை சொல்லி இணைப்பைத் துண்டித்தார் .

அவனுங்க அப்படித்தான் பேசுவான்க தம்பி .ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு, இருக்கிறவங்களுக்கு நம்மள மாதிரி ஆளுகள பார்த்தா எளக்காரமா தான் இருக்கும் என்று அங்கு இருக்கும் பயணிகள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பேருந்து நிலையத்தில்இருக்கும் பெரியவர் தர்ப்பூசணி விற்றுப் போகும் மினிலாரியைக் கூப்பிட்டார் .

தம்பி ஒரு பழம் எவ்வளவு? என்று கேட்க அவரின் பேச்சைச் சட்டை செய்யாமலே அந்த லாரி கிளம்பியது .

இதைப் பார்த்த பரணி சலித்துக் கொண்டான்.

பாருங்கள் உங்க பேச்சக் கேக்காம கூட போய்ட்டான் என்று சொன்னபோது ,அந்த பெரியவரின் நிலை அவரின் வறுமை எல்லாம் அவரை ஒரு சேர முகம் வாட வைத்தது .

பரணி அவருக்காக வருந்தினான்.

சரி விடுங்க ஐயா. நாங்க பஸ்ஸுக்கு நிற்கிறோம். எங்கள எதிர்பார்த்து எந்த பஸ்ஸும் வரல. நீங்க தர்பூசணி கேட்டீங்க அவனுங்களும் இதுதான் ஏழைகளுடைய நிலை என்று பரணி அந்த பெரியவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவரின் பேச்சை கேட்காமல் போன அந்த தண்ணீர் பழ லாரியில் இருந்த பையன் ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு அந்த பெரியவரிடம் கொடுத்தான்.

இதை எதிர்பார்க்காத அந்தப் பெரியவர்

தம்பி இந்தா பணம் என்று காெடுக்க

பணம் கொடுக்க வேண்டாம் நீங்களே வச்சுக்கங்க என்று சொல்லிப் போனான் அந்தச் சிறுவன்.

இதைப் பார்த்த பரணிக்குத் தூக்கி வாரி போட்டது. ஈரம் உள்ள மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

அந்தப் பெரியவர் முழு பழத்தையும் சாப்பிட முடியாமல் பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் பயணிகளிடம் கேட்டார். எல்லோரும் வேண்டாம் என்று சொன்னார்கள்.

அவரின் எதிரில் இருக்கும் ஒரு பழக்கடைக்காரன் கத்தியுடன் வந்து தர்பூசணி பழத்தை வெட்டி பெரியவருக்குக் கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதத்தை எடுத்துப் போனான்.

பரணி அவருடன் நின்று கொண்டிருந்த பயணிகள் பேருந்துக்காக இன்னும் நின்று கொண்டு தான் இருந்தார்கள் பேருந்து வந்த பாடு இல்லை.

உச்சியில் இருந்த சூரியன் மெல்ல மெல்ல நகர்ந்து மேற்கில் சாயத் தொடங்கியது.

பேருந்து நிலையத்திலிருந்து பெரியவர் தன் கையில் பிடித்திருந்த துணியை விலக்கி இருந்தார்.

பேருந்து நிலையத்துக்கு மதியானம் வந்தோம் .இப்போ பொழுது இறங்கி போச்சு. இன்னும் பஸ் வந்த பாடில்ல என்ற அலுத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தவர்களுக்கு ஆறுதலாக ஒரு பேருந்து வந்தது .

பெரியவருக்கு மதிய நேரம் இலவசமாக தர்பூசணி கொடுத்த அந்த மினி டோர் வண்டி சென்னையைச் சுற்றி மறுபடியும் அதே இடத்திற்கு வந்தது .

அடப்பாவிகளா நடந்து பாேய் இருந்தா கூட இந்த நேரம் மாமல்லபுரம் இருக்கலாம் போல. இவ்வளவு லேட்டாவா வர்றது? என்று பரணி சலித்துக் கொண்டான்.

பேருந்தில் ஏறிய பயணிகளுக்கு பேருந்தின் மீதும் நடத்துனர் ஓட்டுனர் மீதும் கோபம் தலைக்கு ஏறியது .

ஏன் இவ்வளவு நேரம் பஸ் இல்ல? என்று பயணிகள் எகிற ஓட்டுனரும் நடத்துனரும் பொறுப்பில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கோபத்தைகண்ட ஒரு தர்ப்பூசணி வியாபாரி ,பேருந்தில் இருந்த தர்பூசணியை வெட்டி ஆளுக்கு ஒரு பீஸ் கொடுத்தார்.

சார் வாழ்க்கையில இந்த மாதிரி விஷயமெல்லாம் சகஜம் தான் கோவப்பட்டு இங்கு எதுவும் ஆகப் போறதுல்ல என்று பயணிகளுக்கு தர்ப்பூசணியை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார் அந்த வியாபாரி.

பயணிகளுக்குக் கொஞ்சம் சூடு தணிந்திருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *