செய்திகள்

தரமற்றதாக அறிவிக்கப்பட்ட 53 மருந்துகள் தமிழ்நாட்டில் பயன்படுத்துவதில்லை

Makkal Kural Official

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப். 28–

மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள, தரமற்ற 53 வகையான மருந்துகளை தமிழ்நாட்டில் பயன்படுத்துவது இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 28 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:–

இந்த ஆண்டு பிப்ரவரி 25 ந்தேதி தேசிய முதியோர் நல மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவில் வெளியிடங்களில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒரு வளாகத்தில் சிறிய அளவில் தேசிய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 8.64 ஏக்கர் பரப்பளவில் தேசிய நலவாழ்வு மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் ஒரே முதியோர் நல மருத்துவமனை இது. 200 படுக்கை வசதி, 40 தீவிர சிகிச்சை படுக்கை வசதி உள்ளது.

முதலமைச்சர் அறிவுறுத்தல் படி சென்னை, கோவை என அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டண படுக்கை அறைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மருத்துவமனையிலும் 20 கட்டண படுக்கை அறை உள்ளது. மிகவும் குறைந்த அளவாக நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்திற்குள் உணவு வசதியும் கொடுக்கப்படுகிறது.

24 மணி நேரமும் உள்நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பாட்டில் உள்ளது. முதியோருக்கு அறுவை சிகிச்சை மற்றும் இருதய மருத்துவ பிரிவு, சிறுநீரகம் மருத்துவ பிரிவு, இரைப்பை குடல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம் முடநீக்கியில் பிரிவு, இயன் முறை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் முதியவர்கள் மாலை ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிக்க நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணை

பல்லாங்குழி, செஸ், கேரம் போர்டு போன்ற விளையாட்டு சாதனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை முதியோருக்கான பல்வேறு பிரத்யக சேவைகள் கொண்டுள்ளது. 60 நிரந்தர பணியிடங்கள், 276 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எம்ஆர்பி நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

மருந்தாளுணர், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பணியாளர்கள் 43 பேருக்கு இன்று ஒப்பந்த பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து முதியவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எட்டு மாதங்களில் 1,11,918 புறநோயாளிகள் இந்த மருத்துவமனை மூலம் பயன் பெற்றுள்ளனர். 579 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 2900 சிடி ஸ்கேன், 5905 எக்ஸ்ரே, 1,62,301 ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கு ரூ.1 கோடி மதிப்பிலான, தேவைப்படும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரூ.8 கோடி மதிப்பிலான எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி மிக விரைவில் இங்கு செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்ற வருகிறது என்றார்.

பயன்படுத்துவதில்லை

பாராசிட்டமில் உள்ளிட்ட 53 வகையான மருந்துகள் தரமானவை இல்லை என தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு தொகுப்பாகதான் மருந்துகள் தயாரித்து அனுப்புவார்கள். அதில் ஒரு பேட்ச்10 கோடி என்றால் மற்றொரு பேட்ச் 10 கோடி என்பார்கள். அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒரு தொகுப்பில் உள்ள பாராசிட்டமால் உள்ளிட்ட 53 வகையான மருந்துகள் தரமானவை இல்லை என தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த பேட்ச் மருந்துகளுக்கு தடை என்று மட்டும் தான் தெரிவித்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக அல்ல. நாம் ஆர்டர் கொடுத்துள்ள மருந்துகளில் அவர்கள் சொல்லி இருக்கும் இந்த 53 வகையான மருந்துகள் இல்லை.

தமிழ்நாட்டில் தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ள தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *