சிறுகதை

தயாரிப்பாளர் – ராஜா செல்லமுத்து

விடாமுயற்சி நிச்சயம் வெற்றி தரும்; முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் ஜெயிப்பதில்லை ; முயற்சி செய்பவர்கள் எல்லாம் முன்னுக்கு வருவதில்லை . இந்த வித்தியாசமான கோட்பாட்டுக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது சினிமா வட்டாரம்.

சினிமா என்ற விளக்கில் விழுந்து எழுந்து கொள்ள முடியாமல் அழிந்துபோகும் விட்டில் பூச்சிகள் சினிமா துறையில் ஏராளம். ஜெயித்தவர்கள் குறைவு. தோற்றவர்கள் அதிகம்

சினிமாவில் எவ்வளவோ முயன்று முயன்று முன்னேற முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான் ஜெயம்

அவன் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் பொய்யானவர்களாக இருந்தார்கள். அப்போது வரும் வார்த்தைகளை உதட்டில் கொடுத்து விட்டு அடுத்த முறை பேசும்போது அடுக்கடுக்கான பொய்களை அவிழ்த்து விடும் வேடதாரிகள்.

சினிமாவில் இருப்பவர்களில் உதவி இயக்குனர்கள் தான் எழுதப்படாத வறுமையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

உதவி இயக்குனர்களில் ஜெயமும் அந்த வரிசையில் இருப்பவன்தான்.

ஜெயத்தின் நண்பர் ஒருவரின் உதவியால் ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார் . அந்தத் தயாரிப்பாளரை முதலில் பார்த்தபோது கடவுளையே கண்டதுபோல தரிசித்தான் ஜெயம்.

எப்படியும் தனக்கு ஒரு படம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரைப் பின் தொடர்ந்தான் ஜெயம்.

தயாரிப்பாளர் பேசும் வார்த்தைகள் எல்லாம் வேதவாக்காக நினைத்துக் கொண்டு அவரின் அடுக்கடுக்கான அவதாரங்களில் பின்தொடர்ந்தான் ஜெயம்.

எப்போது படம் ஆரம்பிக்கலாம்? எப்போது வெளியிடலாம் ? எவ்வளவு பட்ஜெட்? என்றெல்லாம் பேசி ஆகிவிட்டது .

எப்படியும் உதவி இயக்குனர் என்ற நிலையிலிருந்து இயக்குனர் என்ற நிலைக்கு உயர்ந்து விடலாம் என்ற நினைப்பில் இருந்தான் ஜெயம்.

அந்த நினைப்பு கைகூடியது. நினைத்து இரவெல்லாம் தூங்காமல் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பான்.

தயாரிப்பாளருடன் பேசியதிலிருந்து படப்பிடிப்பிற்கான வேலை ஒன்று கூட நகராமல் இருந்தது .

ஒரு நாள் தயாரிப்பாளரிடம் ஜெயம் கேட்டான்.

சார் எப்ப ஆரம்பிக்கலாம்? தயாரிப்பாளரும் அவரது நண்பரும் ஜெயத்திடம் விவரமாகச் சொன்னார்கள்.

தம்பி இன்னும் ஒரு மாசத்துல தீபாவளி வருது. தீபாவளி முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று ஒரு உத்தரவாதத்தை கொடுத்தார்கள்.

அதுவரையில் இதுதான் இலக்கு என்று தீர்மானமாக சொல்ல முடியாத நிலையிலிருந்து தயாரிப்பாளருக்கு இதுதான் இலக்கு என்று முடிவான போது ஜெயம் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான்.

எவ்வளவு வருஷங்கள் காத்துக் கிடந்தோம். இன்னும் ஒரு மாசம் தீபாவளி முடியும் வரைக்கும் காத்து இருக்க மாட்டோமா? கண்டிப்பா நமக்கு இந்த படம் கிடைக்கும் என்று முடிவு செய்தான்.

தீபாவளி வந்தது . தீபாவளி முடித்த கையோடு ஒரு நாள் இரண்டு நாள் என்று தள்ளிப் பின்னர் மறுபடியும் தயாரிப்புக்குத் தொடர்பு கொண்டான்.

இரண்டு மூன்று நாட்கள் ஜெயத்தைச் சந்தித்த தயாரிப்பாளர் மறுபடியும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

இன்னும் பொங்கலுக்கு ஒரு மாசம் தான் இருக்கு .பொங்கல் முடியட்டுமே. பண்ணிடலாம் என்று சொன்னார்.

என்ன இது? தீபாவளி முடியட்டும்ன்னாங்க தீபாவளி முடிஞ்சது .இனி பொங்கல் ; அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு என்ற ஏக்கப் பெருமூச்சு விட்டான்.

சரி பரவால்ல. இந்த ரெண்டு மாசம் தான் அதையும் கடந்து விடலாம் என்று வருடங்களை தொலைத்த அவன் இரண்டு மாதங்களையும் தொலைத்தான்.

பொங்கலும் வந்தது . அது ஒரு நாள் இரண்டு நாட்கள் கொண்டாடக்கூடிய பண்டிகை அல்ல. ஒரு வாரம் கொண்டாடக்கூடிய பண்டிகை என்பதால் அந்த பொங்கல் அவனுக்கு கசப்பாக இருந்தது.

பொங்கல் நாட்களை எல்லாம் கழித்துவிட்டு ,அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து தயாரிப்பாளருக்கு போன் செய்தான் .

பாெங்கல் முடிஞ்சது ஆரம்பிக்கலாமா சார் ? என்றபோது

ஆரம்பிக்கலாம். ஒரு சின்ன சிக்கல் இருக்கு. இப்ப ஊராட்சி மன்ற தேர்தல் வருது . அதுல எங்க சொந்தக்கார் இருக்காங்க. கொஞ்சம் காசு பணம் கொடுத்து இருக்கோம். எலக்சன் முடிஞ்சதுமே பட ஆரம்பிக்கலாம் என்றார்.

தலையை சொரிந்து சரி சார் என்று இரு மனதாக ஒப்புக் கொண்டான்.

சரி எவ்வளவு வருஷங்கள வேஸ்ட் பண்ணிட்டோம் . ஒரு மாசம் தானே எலக்சன் முடியட்டும் என்று நினைத்தான்.

அவன் நினைத்தபடியே தேர்தலும் வந்து முடிந்தது .தேர்தல் முடிந்த கையோடு தயாரிப்பாளருக்கு போன் செய்தான் .

என்ன சார் படம் ஆரம்பிக்கலாமா?

தேர்தல் முடிஞ்சிடுச்சு எலக்சன் ரிசல்ட் மட்டும் வரட்டும் என்றார் தயாரிப்பாளர் .

முதல்ல தேர்தல் முடியட்டும் .சரி பரவால்ல; அதையும் பார்ப்போம் என்று அந்த ஐந்து நாளும் காத்திருந்தான் .

அவன் எண்ணியபடியே தேர்தல் ரிசல்ட் வந்தது.

தயாரிப்பாளருக்கு தெரிந்தவர்கள் யாரும் அதில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்திற்காக தேர்தல் ரிசல்ட் சரியல்ல. ஒரு மாசம் கழிச்சு பேசுங்க என்று ஜெயத்திடம் சொல்ல ,

என்ன சார் ஒரு மாசமா என்று இழுத்தான் ஜெயம்.

ஆமாங்க தேர்தல்ல நம்ம பசங்க தாேத்துட்டாங்க. பணம் செலவழிச்சாேம். திருப்பி எடுக்க முடியல. அதனால ஒரு மாசம் கழிச்சு பேசுங்க என்று ஜெயத்தை துரத்திவிட்டார்.

என்னாடா இது முதல்ல தீபாவளி. அதுக்கப்புறம் பொங்கல். அதுக்கப்புறம் எலெக்சன். அதுக்கப்புறம் ரிசல்ட்’அதுக்கப்புறம் …. சாக்குப் போக்கு.

இவங்க படம் பண்ணனும்னு வராங்களா ?இல்ல உதவி இயக்குனர்களாேட வாழ்க்கையில விளையாடுறாங்களா?

காலம் ஒருநாள் கண்டிப்பாக பதில் சொல்லும் .ஜெயத்தின் மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் அவன் பட்ட கஷ்டங்களுக்கும் விலை ஒருநாள் கிடைக்கும் .

இத்தனை நாட்கள் அவனை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர் அவன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கும் நாள், நேரம் வெகு விரைவில் வரும் என்று நம்பிக்கையோடு அன்று முதல் எந்த தயாரிப்பாளையும் பார்ப்பதில்லை. எல்லாம் காலவிரயம் என்ற ஜெயம் மிகத் தெரிந்த பெரிய நண்பர்கள் மூலமாக கிடைக்கும் தயாரிப்பாளர்களே போதும் என்று நினைத்தபடியே …

தன்னுடைய அடுத்த கட்டத்தை நகர்த்த ஆரம்பித்தான் ஜெயம்.

Leave a Reply

Your email address will not be published.