சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் இனத்தைக் காக்க ஆள் இல்லையே: கே.ராஜன்

“அருவா சண்ட’’ படப் பாடல்கள் வெளியீடு

சென்னை, டிச.27–

‘காட்டில் சிங்கம், புலி, மான் எவ்வளவு இருக்குன்னு கணக்கெடுப்பு நடத்துவது உண்டு. ஏதாவது குறைந்துவிட்டால் நிதி ஒதுக்கி அந்த இனத்தை இனப்பெருக்கம் செய்ய வைப்பார்கள். ஆனால் அழித்துகொண்டு வரும் தயாரிப்பாளர்கள் இனத்தை காப்பதற்கு ஆள் இல்லை. அதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்து தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. ‘சிலந்தி’, ரணதந்த்ரா (கன்னடம்), இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

டிசம்பர் 30ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் ஆதிராஜன் பாடல்களை எழுத, தரண்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முரளி இராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக்சாம்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர் வி.ராஜா பேசுகையில், ‘இந்தப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா பொண்வண்ணன் மேடத்திடம் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் மறுத்து விட்டார். இதே பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு போயிருப்பார். சிறிய பட தயாரிப்பாளர்களை கேவலமாக நினைக்கிறார்கள்’ என்று வேதனையை வெளியிட்டார்.

செந்தேன் மழை

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், ‘படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா ஆர்வமான இளைஞர். கபடி வீரர் கேரக்டரில் அற்புதமாக நடித்திருக்கிறார். ஆதிராஜன் துல்லியமாக இயக்கியிருக்கிறார். புவியிலே செந்தேன் மழை, செவியிலே தரணின் சங்கீத அலை என்பதுபோல் தரணின் இசை நன்றாக வந்துள்ளது. நாயகன் வி.ராஜாவின் வரவு தமிழ்சினிமாவுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்’ என்றார். கூடவே வாழ்த்தினார்.

படத் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், ‘வி.ராஜா வேகமானவன்’ விவேகமானவன். நட்புக்கு இலக்கணம் அவன். நட்புக்காக உயிரையும் கொடுப்பவன் என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன் பேசுகையில், ‘தரணின் இசை அருமையாக இருக்கிறது. கபடி பற்றிய இந்தப் படம் தேவையான படம். இயக்குனர் ஆதிராஜன் நன்றாக திரைக்கதை பண்ணக் கூடியவர்’ என்றார்.

போராளி ஆதிராஜன்

தயாரிப்பாளர் கேயார் பேசுகையில், “இயக்குனர் ஆதிராஜன் நிறைய போராட்டத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படம் ஜெயிப்பதற்கான நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கிறது. நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காகவே தேசிய விருது கிடைக்கும். அவார்டு மட்டுமின்றி ரிவார்டும் கிடைக்கும்”என்றார்.

விழாவிற்கு வந்தவர்களை இயக்குனர் ஆதிராஜன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நடிகர்கள் செளந்தர்ராஜா, அபிசரவணன், தயாரிப்பாளர் ரிஷி ராஜ், இசையமைப்பாளர் தரண்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *