செய்திகள்

தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது: ராகுல் காந்தி பேச்சு

தமிழகத்தில் யாரும் எதையும் திணிக்க முடியாது

சென்னை, மார்.1–

தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது. அதனால், என்னை தமிழன் என உணர்ந்தேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:–

என்னுடைய அண்ணன் மு.க.ஸ்டாலினைப் பாராட்ட விரும்புகின்றேன். அவருடைய வாழ்க்கை என்பது நீண்ட நெடிய போராட்டம் நிறைந்ததாகும். பல ஆண்டுகள் அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டபொழுது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து வருவதற்காக நான் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நேற்றைய தினம் என்னுடைய தாயார் என்னை அழைத்து, நாளை மறுதினம் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் என்று சொன்னார். எனக்குத் தெரியும் என்று நான் சொல்லிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா? என்று கேட்டேன். தெரியாது என்று என்னுடைய தாயார் சொன்னார். 69 வயது என்று நான் சொன்னவுடன்,

சாத்தியமே இல்லை என்று என்னுடைய தாயார் சொன்னார்.

நான் என்னுடைய தாயாரிடம் கேட்டேன், அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்றேன். 50 அல்லது 60 வயதிற்குள்தான் இருக்கும் என்று என்னிடம் அவர் சொன்னார். நான் அப்படி சொன்னவுடன் என்னுடைய தாயார், கூகுளிடம் அந்த செய்தியை ஒப்பிட்டுப் பார்த்து, ஆம், நீ சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டார்.

நான் சொல்லப் போகின்ற செய்தி இந்தப் புத்தகத்தில் இருக்கிறதா? இல்லையா? எனக்குத் தெரியாது. ஆனால், அவர் இன்னொரு புத்தகத்தை எழுதவேண்டும்; அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதைப்பற்றி.

தமிழகம் வந்தால் மகிழ்ச்சி

தமிழகம் வந்தாலே எனக்கு ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. நான் மக்களவையில் ஆற்றிய உரையில் தமிழகத்தின் சிறப்புகள் குறித்து பேசினேன். அந்த உரையை தமிழக மக்கள் அனைவரும் பாராட்டியதை அறிவேன். அந்த உரையில் என்னை அறியாமல் நான் தமிழன் என்றேன். கூட்டம் முடிந்து வெளியில் வந்தபோது, உங்களை ஏன் தமிழன் என்றீர்கள் என பத்திரிகையாளர்கள் கேட்டனர். நான் காரில் ஏறியபோது, நான் தமிழகத்தில் பிறக்கவில்லை. தமிழில் பேசவில்லை. தமிழின் 3 ஆயிரம் ஆண்டு தொன்மையை அறியவும் முற்படவில்லை. பின்னர் ஏன் நான் தமிழன் என்று பேசினேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். பின்னர், எனது ரத்தம் இந்த தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது. அதனால் நான் தமிழன் என்பதை உணர்ந்தேன்.

மண்ணில் இருந்து மக்களும், மக்களிடம் இருந்து குரலும், குரலில் இருந்து மொழியும், மொழியில் இருந்து கலாச்சாரமும், காலச்சாரத்தில் இருந்து வரலாறும், வரலாற்றில் இருந்து மாநிலங்களும், மாநிலங்களில் இருந்து இந்தியாவும் உருவாகின்றன. எனவே, இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம்தான்.

திணிக்க முடியாது

மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழகத்தின் மீது எதையும், யாராலும் இதுவரை திணிக்க முடிந்ததில்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தையும், சொல்லையும், மொழியையும் புரிந்துகொள்ளாமல் எந்த அடிப்படையில் அவர் (பிரதமர் மோடி) தமிழகத்தை பற்றி பேசுகிறார்? மக்களின் மொழியை புரிந்துகொள்ள முடியாமல் எப்படி தமிழர்களுக்காக பேச முடிகிறது? தமிழக மக்கள் திரும்பத் திரும்ப நீட் பற்றி கேட்கிறார்கள். அதற்கு இதுவரை பதில் அளிக்காததுதான், தமிழக மக்களுக்கு அளிக்கும் மரியாதையா?

ஜிஎஸ்டி விதிப்பது நியாயமில்லை. அதனால் பாதகம் ஏற்படுகிறது எனகூறும் தமிழக மக்களை புரிந்துகொள்ளாமல் மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய பாஜக ஆட்சியில், சுதந்திர நாட்டில் முதன்முறையாக மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜம்முவை அங்கு வாழும் மக்களால் ஆள முடியவில்லை. குஜராத், உத்தரபிரதேச மாநிலத்தினரே ஆள்கின்றனர்.

நசுக்கப்படுகிறது

இந்தியா வரலாற்று ரீதியாக பல்வேறு மொழி, கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் பலமே இதுதான். இதை சிதைக்க முற்படுகின்றனர். அதேபோன்று இந்தியாவின் நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகை துறை ஆகியவை திட்டமிட்டு ஒன்றன்பின் ஒன்றாக நசுக்கப்படுகின்றன. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க இவர்கள் யார்? அதை மக்கள்தானே தீர்மானிக்க வேண்டும். இப்போது இதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது.

நமது மக்களாட்சி முறையில் மக்களின் குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் (பாஜக)வரலாற்றை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் எதிர்த்தால் அவர்கள் தோற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.