சிறுகதை

தமிழ் மணி… ராஜா செல்லமுத்து

“தனக்குத் தெரிந்ததைத் தனக்குள்ளே வைத்துக் கொள்ளாமல் அதைத் தரணிக்குத் தாரை வார்ப்பவனே தகுதியான மனிதன்” என்ற தத்துவ முத்துக்களை உதிர்த்தபடியே உட்கார்ந்திருந்தார் தமிழ்மணி .
அவர் பேசுவதை அப்படியே ஆமோதித்துக் கேட்டுக் கொண்டே இருந்தனர். உடன் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் எனும் தமிழ்மணியின் ஜால்ராக்கள்.
“ஐயா பேசுனா அப்படியே தமிழ்நதி உருண்டு ஓடி வருது”
“ஐயா தமிழின் தலைமகன்’’,
” ஐயா தமிழின் மணி. அதான் பேரே அப்படித்தான இருக்கு’’
“தமிழ்ல உங்கள மாதிரி எழுத ஆளே இல்லீங்க. அப்படியே சரஸ்வதி வந்து உங்க எழுத்துல அப்படியே உட்காருது’’.
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று தமிழ் மணி சென்ன போது,
“ஆகா ஆகா அருமை”
“டேய் ரொம்ப தட்டாத”
“அது கணியன் பூங்குன்றனார் சொன்னது’’.
தமிழ் எனக்கு நிறையக் குடுத்திருக்கு. தமிழால நான் நிறைய பலன் அடைஞ்சிருக்கேன். தமிழ என் தெய்வமாவே மதிக்கிறேன் என்று தமிழ் மணி சொன்னபோது
“ஆகா ஓகோ வென்று புகழ்ந்தது கூட்டம்.
தமிழுக்காக நான் உயிரையே குடுப்பேன். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. தமிழுக்காக நான் ஏதாவது பண்ணியாகண்ணுமே என்ற தமிழ் மணியின் வார்த்தையைக் கேட்டு உற்சாகக் கை தட்டலை உதிர்த்தனர் உடன்
உட்கார்ந்திருந்தவர்கள்.
“ஓ.கே தலைவா, உங்க இஷ்டம் நீங்க என்ன சொன்னாலும் சரி தமிழுக்கு நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ அதை நீங்க செய்யலாம்”
“ஆமாய்யா …. தமிழ் தான் என்னோட ஆணிவேர் தமிழ் இல்லன்னா என்னோட அடையாளம் இல்ல என்று மூச்சுக்கு முன்னூறு தடவை ஏன் மூவாயிரம் முறை தமிழ், தமிழ் என்றே பேசிக்கொண்டிருந்தார். அவரின் தமிழ் ஆவர்வத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அவரின் தமிழ் ஆர்வம் ஒரு வியப்பையே அவர்களுக்குள் விதைத்தது.
“ஐயா, தமிழுக்கும் தமிழர்களுக்கும் நீங்க ஏதாவது செய்யனுமே
“ஆமா, நான் உசுரோட இருக்கிற வரைக்கும் தமிழ ஒரு படி என்ன ஓராயிரம் படி மேல ஏத்திவிட்டுருவேன், தமிழ் முதல்வனின் பேச்சு தமிழை உச்சுமோந்தது.
ஐயா தேனீர் அருந்தலாமா?
“ஓ” அருந்தலாமே’’, என அங்கிருந்தவர்கள் ஆமோதிக்க தேனீருக்கு உத்தரவு பிறந்தது.
“ஐயா சிறுதீனி எதுவும் வேணுமா?’’
வேண்டாம் என நினைக்கிறேன் என்று ஒரு சிலர் தூய தமிழில் உரையாடினர்.
என்னய்யா திடீர்ன்னு ஒருத்தரு தூய தமிழ்ல பேசுறாங்க
“எல்லாம் தமிழ்”
“ம்ம்” தேனீர் வந்து விட்டதா?
“ஆமா” அருந்தலாமா?
“ஓ” அருந்தலாமே”
“எல்லோரும் தேனீர் குடிக்க ஆரம்பித்தனர்.
“டிரிங்… டிரிங்…. செல்போனின் தாய்மொழி பேசியது.
“ஹலோ வணக்கம், என்றார்.
‘‘தமிழ் மணி தான் பேசுறதா?’’
“ஆமா, நான்தான்’’,
“ஒண்ணுல்ல… ஒங்க கூட பேசமுடியுமா?’’
“ம்… பேசுங்க”
“ஐயாவோட தமிழ் ரொம்ப நல்லாயிருக்கு” கூடவே படங்கள்லயும் நீங்க நடக்கிறீங்க. ஒங்களோட மரியாதையும் ரொம்ப கூடி நிக்குது. அதுனால எங்களோட ஊருக்கு வந்து ஒரு பேச்சு குடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்” என்று பேசியவரின் பேச்சுக்கு சிறிது நேரம் மெளனமாய் இருந்த தமிழ் மணி.
“ம்ம்” கண்டிப்பா வாரேன்”
“ஆனா பேச்சுக்கு எவ்வளவு குடுப்பீங்க”
என்றார் தமிழ்மணி
“ஐயா சொல்லுங்க’’ என்றார் எதிர் திசையில் இருந்தவர்.
இல்ல ஒருபங்ஷனுக்கு நான் அஞ்சு லட்சரூபா குடுப்பாங்க. நீங்க எவ்வளவு தாரீங்க. என்னோட உதவியாளர்கிட்ட பேசுங்க. அட்வான்ஸ் குடுத்திட்டு, தேதி வாங்கிக்கங்க என்றார் தமிழ் மணி.
வந்திருந்தவர்கள் வாய் பிளந்தனர்.
வந்தவர்கள் மெல்ல மெல்ல அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *