செய்திகள்

தமிழ் பேரறிஞர்கள், சான்றோர்களுக்கு விருதுகள், தங்கப் பதக்கம்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திருவள்ளுவர் விருது – வைகைச்செல்வன்

தந்தை பெரியார் விருது – அ. தமிழ்மகன் உசேன்

தமிழ்த்தாய் விருது – வி.ஜி.சந்தோசம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்

தமிழ் பேரறிஞர்கள், சான்றோர்களுக்கு விருதுகள், தங்கப் பதக்கம்:

எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை, பிப்.1–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (1–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்பிற்கும், ஊடகங்களுக்கும், திருவள்ளுவர் திருநாள் விருதுகள், சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ், வாரஇதழ், திங்களிதழ் விருதுகள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக விருதுகள், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள், மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகள், தமிழ்ச் செம்மல் விருதுகள் என மொத்தம் 77 விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

ரூ.1 லட்சம் காசோலை

புரட்சித் தலைவி அம்மா, தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபடும் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வந்தார். அவ்வகையில் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, திருவள்ளுவர் திருநாள் விருதுகளாக 2021ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் வைகைச்செல்வனுக்கும், 2020ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது அ. தமிழ்மகன் உசேனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது வரகூர் அ. அருணாச்சலத்துக்கும், பேரறிஞர் அண்ணா விருது மறைந்த கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனனுக்குரியதை அவரின் சார்பில் அவரது மகன் குடியரசு ஜனார்த்தனனிடமும், பெருந்தலைவர் காமராசர் விருது ச. தேவராஜூக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவுமதி (எ) மதியழகனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது திரு.வி.என்.சாமிக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் வீ. சேதுராமலிங்கத்துக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

வி.ஜி.சந்தோசம்

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாக 2020ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு, விருதிற்கான தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை, கேடயம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை முதலமைச்சர் அச்சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வி.ஜி. சந்தோசம் மற்றும் இணைச் செயலாளர் வி.ஜி.பி. ராஜாதாஸ் ஆகியோரிடம் வழங்கி கௌரவித்தார்.

ஒரு சவரன் தங்கப் பதக்கம்

கபிலர் விருது செ. ஏழுமலை, உ.வே.சா விருது கி. இராஜநாராயணனின் சார்பாக பெயரன் தீபன், கம்பர் விருது மருத்துவர் எச்.வி. ஹண்டே , சொல்லின் செல்வர் விருது நாகை முகுந்தன், உமறுப் புலவர் விருது ம.அ. சையத் அசன் (எ) பாரிதாசன், ஜி.யு.போப் விருது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனைவர் திருமதி உல்ரீகே நிகோலசின் சார்பாக அவரது மகன் தேசிகன், இளங்கோவடிகள் விருது திரு.மா. வயித்தியலிங்கன், அம்மா இலக்கிய விருது முனைவர் தி. மகாலட்சுமி, சிங்காரவேலர் விருது ஆ.அழகேசன், மறைமலையடிகளார் விருது மறை தி. தாயுமானவன், அயோத்திதாசப் பண்டிதர் விருது முனைவர் கோ.ப. செல்லம்மாள், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் ஊரன் அடிகள், காரைக்கால் அம்மையார் விருது முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, 2019ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சே. இராஜாராமன் ஆகியோரிடம் முதலமைச்சர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

கேடயம், தகுதியுரை

மேலும் 2020ம் ஆண்டிற்கான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது தினமணி நாளிதழ் சார்பில் அதன் மேலாண்மை இயக்குநர் சித்தார்த் மற்றும் ஆசிரியர் கே. வைத்தியநாதன், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது கல்கி வார இதழ் சார்பில் கல்வி பொறுப்பாசிரியர் ரமணன், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது செந்தமிழ் திங்களிதழ் சார்பில் அதன் ஆசிரியர் இரா. சதாசிவம் ஆகியோரிடம் முதலமைச்சர் விருதுகளை வழங்கியதோடு, விருதுத் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, கேடயம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

2020ம் ஆண்டிற்கான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் விருதான தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் கு. சிவமணிக்கு முதலமைச்சர் வழங்கியதோடு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

2020ம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை மறைந்த சோ. சேசாச்சலத்தின் சார்பில் அவரது மகன் கோபிநாத், முனைவர் இராம. குருநாதன், ப. குணசேகர், பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத் ஆகியோரிடம் முதலமைச்சர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளாக 2020ம் ஆண்டிற்கான இலக்கிய விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க், மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சுப. திண்ணப்பனின் சார்பில் அவரது மகள் இன்பமணி ஆகியோரிடம் முதலமைச்சர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டிராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஓம்டெம் டாய், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தர மோகன்.பி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ச. முனியநாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தெ. பாஸ்கர பாண்டியன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) கோ. விசயராகவன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *