செய்திகள்

தமிழ் எண்கள் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலேயர் காலத்து மைல்கல்

நெல்லை, மே 29–

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து பிரமதேசம் செல்லும் சாலையின் இடது புறமாக, கௌதமபுரி வண்டன் குளக்கரையில் 18 ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண்களுடன் கூடிய மைல்கல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மைல் கல்லின் வரலாற்று பின்னணி குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு ஆகியோர் கூறி இருப்பதாவது:–

இதுவரை புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் 5 கல்வெட்டு மைல்கல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளில், தமிழ் ரோமன், அரபு எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மைல் கல் இப்பகுதியில் அடையாளங்காணப்பட்ட முதல் தமிழ் எண் மைல் கல்லாகும்.

பிரமதேசத்தின் வரலாறு

முதலாம் ராஜராஜன் சோழர் ஆட்சிகாலத்தில் மிக முக்கியமான தளமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் 1850 ஆண்டுவரை தாலுக்கா தலைமையிடமாகவும் இருந்த பிரம்மதேசம் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

இது ஆங்கிலேயர் ஆட்சியின் மிக முக்கியமான கட்டுமான கட்டமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 18 ம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அம்பாசமுத்திரம் தொடங்கி பிரமதேசம் வரை இச்சாலையை அமைத்து முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மைல்கல்லில் உள்ள தமிழ் எண்

கௌதமபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டில் அம்பாசமுத்திரம் “க”, பிரமதேசம் “க” அதாவது கல்வெட்டு நடப்பட்டுள்ள வண்டன் குளக்கரையிலிருந்து இரண்டு ஊர்களும் நேரெதிர்திசையில் 1 மைல்தூரம் என்று ஒரு பக்கத்தில் மட்டும், தமிழ் எண் பொறிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் மற்றும் பிரமதேசம் செல்பவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தவழியில் வேறு எங்கும் சாலை ஓரத்தில் இதைப்போன்ற தமிழ் எண் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அடையாளம் காணப்படவில்லை. இக்கல்வெட்டின் மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ் சாலையாக இருந்துள்ளதை மைல்கல் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

மைல் கல்லின் காலம்

இது குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை என்பதால் பிரமதேசம் தாலுக்கா தலைமையாக இருந்த காலக்கட்டத்தில் அதாவது கி.பி 1850 க்கு முன்னதாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் சாலை அமைக்கப்பட்ட போது கிழக்கிந்திய கம்பெனியினரால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் எண் மைல் கல்லின் சிறப்பு

தற்போது நடைமுறையிலுள்ள அரபு எண்கள் பயன்படுத்தாமல் ரோமன் எண்களையும் தமிழ் எண்களையும் மட்டுமே பயன்படுத்தி இம்மைல் கல் பொறிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத் தில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ரோமன் மற்றும் தமிழ் எண்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளதை வெளிப்படுத்தும் மிக முக்கியமான சான்றாக உள்ளது.

மேலும் ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள்அரசு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளதையும், பொதுமக்களும் தமிழ் எண்களையே பயன்படுத்தினர் என்பதை அறிந்து கொள்வதோடு தமிழ் எண்கள் அண்மை காலமாகத்தான் புழக்கத்திலிருந்து அற்றுப் போயிருக்கிறது என்பதையும் தெளிவாக்குகிறது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *