சிறுகதை

தமிழ்ப்பிழை | ராஜா செல்லமுத்து

வெயில் கொளுத்தும் ஒரு மதிய நேரம். நண்பர் சரவணன் அலுவலகம் வருவதாகக் கூறினார்.

“ஓ.கே வாங்க சார். எப்ப வருவீங்க?”

ஒரு ஒன்னரை மணிக்கு?

” சரி வாங்க. வந்ததும் எனக்கு போன் பண்ணுங்க. நான் வர்றேன் ”

ஓ.கே” என்ற நண்பர் போனைக் கட் செய்தார்.

“சரி வரட்டும் என்ற யோசனையில் அடுத்த கட்ட வேலைக்கு ஆயத்தமானேன்.

சரசரவென எழுதிக் கொண்டிருந்த ஒரு சிறுகதையில் ஒரு இடத்தில் சந்திப்பிழை விழுந்தது. அது தெரியாமலே என் கதை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.

கதையின் இறுதி முடிவுக்கு வரும் போது, நண்பர் போன் செய்தார்.

‘‘ஓ.கே இந்தா வாரேன்” என்ற நான் சிறுகதையின் இறுதியை அப்படியே வைத்துவிட்டு கீழே

இறங்கினேன் . சரவணன் அலுவலகத்தின் கீழே நின்றிருந்தார்.

“ஹலோ சார்…. எப்படி இருக்கீங்க?

“ம், சூப்பர் …. நீங்க எப்படி இருக்கீங்க. சராசரியான விசாரிப்புகளுக்குப் பின், இருவரும் பிரதான சாலையில் நடக்க ஆரம்பித்தோம்.

“அப்புறம்… ஒங்க ஒர்க் எப்படி போயிட்டு இருக்கு

“ம்” சூப்பர்.

“சரி டீ சாப்பிடலாமா?

“ஓ….. தாராளமா” என்ற இருவரும் சாலையின் ஓரமிருந்த ஒரு டீக்கடைக்குள் நுழைய முற்பட்டோம்.

“சார் ”

“என்னங்க”

இந்தக் கடை வேணாம்.

“ஏன்?

“இங்க சரியா கிளாஸைக் கழுவ மாட்டானுக”

“ஓ….. அப்படியா? வாங்க வேற கடைக்கு போவோம்,’’ என்றார்.

இருவரும் அடுத்த கடையை நோக்கி முன்னேறினோம். சாலையின் ஓரத்தில் ஒருவன் ஒரு சாமிபட ப்ளக்ஸை போட்டு ஆணியடித்துக் கொண்டிருந்தான். என்ன இது இருவரும் அதை உற்றுப் பார்த்தோம்?

அது சாமி படம், போடப்பட்ட திருவிழாவின் வாழ்த்து ப்ளக்ஸாக இருந்தது.

அட டேய் இது என்னடா கொடுமையா இருக்கு என்ற போது சரவணன்.

என்னாச்சு? என்று ஆச்சர்யமாகக் கேட்டார். அங்க பாத்தீங்களா?

எங்க? என்று சரவணன் கேட்டபோது கடவுளின் பெயரைக் கை நீட்டிக்காட்டினேன் .அங்கே பெரிய பாளையத்தம்மன் என்ற பெயருக்குப்பதிலாய் பொரிய பாளைத்தம்மன் என்று எழுதியிருந்தது.

ஹலோ ஹலோ என்று ஆணியடித்துக் கொண்டிருப்பவரைக் கூப்பிட்டேன். என் வார்த்தைகளைச் செவிகளில் வாங்காமலே, அவர் ஆணியை மட்டுமே அடித்துக் கொண்டிருந்தார். இன்னொருவனும் உள்ளே இருந்து வெளியே வந்தான்.

“ஹலோ ஹலோ என்று நான் கூப்பிட்டபோது, இரண்டு பேருக்கும் நான் பேசிய தமிழ் புரியவில்லை

“ஓ.கோ இவனுக இந்திக் காரனுக போல,

சார் இங்க பாத்தீங்களா? ‘‘பொரிய பாளைத்தம்மன்னு’’, இவ்வளவு தப்பா பிரிண்ட் பண்ணியிருக்கானுக. இந்த தப்பு எவனுக்கும் தெரியலையே என்று நான் நொந்து சொன்னேன்.

நீங்க வேற . இங்க இதெல்லாம் சாதாரணமா நடக்கும் . எல்லாரும் வேற மாநிலத்துக்காரனுகளா இருந்தா, பிறகு எப்படி தமிழ் சரியா இருக்கும். இத விட இன்னொன்னு சொன்னா ரொம்ப பீல் பண்ணுவீங்க?

என்ன?

ஒரு நாள் நான் ரோட்டுல போயிட்டு இருக்கும் போது சிலபேர் சுவர்ல எழுதிட்டு இருந்தாங்க. அவ்வளவும் தப்பு தப்பான எழுத்து. எனக்கு வந்துச்சு பாரு கோபம். ஏய் ஏய்யா இப்படி தப்பு தப்பா எழுதிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன். அரை குறையான தமிழ்ல பேசி அதெல்லாம் எனக்கு தெரியாது. இதுல என்ன எழுதியிருக்கோ அத தான் நாங்க அப்படியே பாத்துப் பாத்து எழுதிட்டு இருக்கோம் என்று சொன்னாங்க

“டேய்” என்று கோபம் வந்த நான் எழுதிய பேப்பரை வாங்கி தவற்றைத் திருத்தினேன். அப்படியே சுவரிலிருந்த தவறையும் திருத்தினேன்.

இங்க எழுதுனவனும் தமிழ் இல்ல. சுவர்ல .எழுதிட்டு இருக்கிறவனும் தமிழ் இல்ல.

இங்க எல்லாமே இப்படித்தான் தமிழ் ரொம்ப பாடு படுது என்று சரவணன் சொன்ன போது எனக்கு அதுவே சரி எனப் பட்டது.தமிழ் எப்போதும் சரியான தமிழாக இருக்க வேண்டும். பிழையான தமிழாக இருக்கக் கூடாது என்ற பெருமூச்சோடு பெருமிதம் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *