செய்திகள்

தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவேன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை, மே 11–

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவேன் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழ்வின் சிறந்த 2 ஆண்டுகள்

இதையடுத்து டுவிட்டரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளதாவது:–

கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் (21 – 22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு முழு பட்ஜெட்டுகளையும் (22 – 23, 23 – 24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.

நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும். உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாகாவை முதலமைச்சர் ஸ்டாலின் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன்.

வளர்ச்சிக்கு செயல்திட்டம்

தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம். கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்த போதிலும், அதிமுக ஆட்சி செய்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கி விட்டோம். எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த மனோ தங்கராஜ் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக, இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

முதலமைச்சருக்கு நன்றி

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற ஐடி தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன். இன்று பொறுப்பேற்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *