ஜனாதிபதி முர்மு வழங்க மகள் நித்யாராவ் பெற்றார்
நரசிம்மராவ், சரண்சிங், கர்பூர் தாகூருக்கு ‘பாரத ரத்னா’
வீடு தேடிப் போய் நேரில் அத்வானிக்கு விருது
புதுடெல்லி, மார்ச். 30–
தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் உட்பட 5 பேருக்கு ‘பாரத ரத்னா’ விருதுவை இன்று ஜனாதிபதி முர்மு வழங்கினார்.
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். அதேபோல மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரன்சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்றுக்கொண்டார்.
மறைந்த வேளாண் விஞ்ஞானி தமிழகத்தை சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார்.
மறைந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது மகன் ராம்நாத் தாக்கூர் பெற்றுக் கொண்டார். வயது மூப்பு காரணமாக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று ஜனாதிபதி மாளிகைக்கு வர இயலவில்லை. இதனால் அவருக்கு வீடு தேடி சென்று பாரத ரத்னா விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களை கவுரவிப்பது இந்திய அரசின் வாடிக்கை. அந்தவகையில், மத்திய அரசாங்கத்தால் ‘பத்மஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘பாரத ரத்னா’ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ‘பாரத ரத்னா’ விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாகும். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 5 தலைவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டது.