செய்திகள்

தமிழ்நாட்டு மீனவா்கள் அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்கலாம்

மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேச்சு

சென்னை, ஜூலை 11–

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடல் பகுதி அருகே மீன் பிடிப்பதில் பிரச்னை இருப்பதால், அந்தமான் கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கலாம், அதற்குத் தேவையான உதவிகள் மத்திய அரசால் வழங்கப்படும் என்று ஒன்றிய மீன் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தேசிய மீன் விவசாயிகள் தின மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்த ஒன்றிய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா பேசியதாவது:–

மீன் வளத்துறைக்கென தனி அமைச்சகம் 2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீன் வளத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத் துறைக்கென்று ஒன்றிய அரசு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், 18 மாநிலங்களுக்கு 176 திட்டங்களுக்கு ரூ.138.13 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 14,105 மீனவர்கள் பயனடைந்துள்ளனர்.

ரூ.1 லட்சம் கோடியாக்க இலக்கு

மேலும், 2015-ஆம் ஆண்டு நீலப் புரட்சிக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டது. இது மீனவா்களையும் மீனவ சமூகத்தையும் மேம்படுத்தும். இந்தியாவிலிருந்து இறால் ஏற்றுமதி ரூ. 70,000 கோடியாக உள்ளது. இதை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மீனவா்கள் இலங்கை கடல் பகுதி அருகே மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் இதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மீன் வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். அதை கவனத்தில் கொண்டுள்ளேன்.

அதே நேரத்தில் ஒரு யோசனையை முன்வைக்கிறேன். அதாவது, தமிழ்நாடு மீனவா்கள் இலங்கைப் பகுதி அருகே மீன் பிடிப்பதில் பிரச்னை இருப்பதால் அவர்கள் அந்தமான் கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கலாம். அந்தமான் கடல் பகுதியில் அதிக மீன் வளம் உள்ளது. அங்கு மீன்பிடிக்க தமிழ்நாட்டு மீனவா்கள் சென்றால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒன்றிய அரசு வழங்கும் என்றாா்.

மாநாட்டில் மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர்கள் எல்.முருகன், சஞ்சீவ் கே.பல்யாண், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் மீன் வளத்துறை அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், மீனவ தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *