செய்திகள்

தமிழ்நாட்டுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 113 புதிய கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி, ஜூலை 8–

நாட்டில் புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் 5 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி அதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்டன.

மொத்தம் 170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 113 விண்ணப்பங்கள் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், 58 விண்ணப்பங்கள் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பதற்கும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருந்தது.

அதன்படி உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 14, ராஜஸ்தான் – 12, தெலங்கானா – 11, மேற்கு வங்கம் – 8, மத்தியப் பிரதேசம் – 7, ஆந்திரா– 7, கர்நாடகம் – 5, தமிழகம் – 5 மருத்துவக் கல்லூரிகளும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்துக்கு 3 புதிய மருத்துவக் கல்லூரிகளும், கேரளா, ஒடிசா, குஜராத் மாநிலங்களில் தலா 2 கல்லூரிகளும், ஹரியாணா, டெல்லி, அசாம், பஞ்சாப், சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றை ஆய்வு செய்து அதன்பேரில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், அவனம்பட்டில் ஜே.ஆர். மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இவற்றுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகளை துவக்குவதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியிருக்கிறது. ஒரு மருத்துவமனையானது, அனைத்துப் பிரிவுகளிலும் சிகிச்சை அளித்து அனைத்துத் துறை மருத்துவர்களையும் கொண்டிருந்தால் முதற்கட்டமாக 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையுடன் மருத்துவமனை தொடங்கலாம். அவ்வாறு மருத்துவமனையில் குறைந்தது 200 படுக்கை வசதி, 20 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கை வசதி இருக்க வேண்டும். நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் இதுவரை 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது வழங்கப்பட்டிருக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையின்படி மொத்தம் 800ஐ எட்டிவிடும். இதில் 50 தான் அரசு மருத்துவக் கல்லூரியாகவும், மற்றவை தனியார் மற்றும் தன்னாட்சிப் பெற்ற மருத்துவக் கல்லூரிகளாகும்.

கடந்த 2013 – 14ம் ஆண்டில் எம்பிபிஎஸ் சேர்க்கை இடம் 51 ஆயிரத்து 348 ஆக இருந்த நிலையில், 2023–24ம் ஆண்டு 1 லட்சத்து 8,990 ஆக உயர்ந்துள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடம் 2013–14ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த நிலையில், 2023 – 24-ல் 68 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *