செய்திகள்

தமிழ்நாட்டுக்கு கெடுதல் செய்பவராக கவர்னர் இருக்கிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை, ஜன.30-

தமிழ்நாட்டுக்கு கெடுதல் செய்பவராக கவர்னர் இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென் மாநிலங்களில் உள்ள கேரள கவர்னர் ஆரீப் முகமதுகான், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தமிழ்நாட்டு கவர்னர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுக போட்டியே இருப்பது போல தெரிகிறது.

மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் கவர்னர் என்பதையே மறந்து, பா.ஜனதாவால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித்தொடர்பாளர்களை போல நடந்துகொள்கிறார்கள்.

நாகப்பட்டினம் சென்ற கவர்னர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்கு காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.

அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு கவர்னருக்கு அழகா?. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்?. வாய்க்கு வந்ததைப் பேசிடவும், எழுதிடவும் அவர் முகவரி இல்லாத ஆள் அல்லவே?. கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் கவர்னர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமாம்.

எந்தப் பணிக்காக வந்தாரோ…

எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு கவர்னராக வந்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா, அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா என்றால் இல்லை. குடும்ப வேலையாக அடிக்கடி டெல்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக எப்போதாவது டெல்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை.அவர்தான், சொந்தமாக எந்த நன்மையும் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் இருக்கிறார் கவர்னர்.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக்கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை கவர்னரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தே கத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.

கவர்னராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பாரதீய ஜனதா தலைமை அனுமதி அளித்தால், ‘அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது’ என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *