செய்திகள்

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 5.26 டி.எம்.சி. தண்ணீர் வழங்க கர்நாடகத்துக்கு ஒழுங்காற்றுக்குழு வலியுறுத்தல்

புதுடெல்லி, ஜன.19-–

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்காக தமிழ்நாட்டுக்கு 5.26 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு வலியுறுத்தி உள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 92-வது கூட்டம் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒழுங்காற்றுக்குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார்.

காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் தங்களது அதிகாரிகளை அந்தந்த மாநிலங்களில் இருந்து ஆன்லைனில் பங்கேற்க வைத்தன. இது 92-வது கூட்டம் மட்டுமின்றி இந்த ஆண்டின் முதல் கூட்டமும் ஆகும்.

கூட்டம் தொடங்கியதும் வழக்கம் போல நீர் தரவு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தண்ணீர் தேவை குறித்து கேட்கப்பட்டது. அப்போது தமிழக அதிகாரிகள், ‘வருகிற மே மாதம் வரை 19 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்’ என கேட்டுக்கொண்டனர். ஆனால் கர்நாடக அதிகாரிகள் வழக்கம்போல முரண்டு பிடித்தனர்.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 52 சதவீத மழை மட்டுமே பெய்திருப்பதாகவும், அணைகளில் தற்போது இருக்கும் நீர் தங்களது மாநில விவசாயம் மற்றும் குடிநீருக்கே போதுமானதாக இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள், எனவே தமிழ்நாடு கேட்கும் அளவுக்கு தண்ணீர் திறந்துவிட சொல்லக்கூடாது என ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகளை கர்நாடக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள், ‘ஜனவரி மாதத்துக்காக வினாடிக்கு 1,182 கனஅடி வீதம் 2.76 டி.எம்.சி. நீரும், பிப்ரவரி மாதத்துக்காக 998 கனஅடி வீதம் 2.5 டி.எம்.சி. நீரும், ஆக மொத்தம் 2 மாதங்களுக்கும் சேர்த்து 5.26 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தியது. இதுதொடர்பான பரிந்துரைகளை மேலாண்மை ஆணையத்துக்கும் ஒழுங்காற்றுக்குழு அனுப்பி வைத்தது.

காவிரி ஒழுங்காற்றுக்குழு வழங்கிய இந்த பரிந்துரையை கர்நாடக அரசு நிறைவேற்றாவிட்டால், காவிரி மேலாண்மை ஆணையம் இதனை உத்தரவாக கர்நாடகத்துக்கு பிறப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *