காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
புதுடெல்லி, ஜூலை 25-–
தமிழ்நாட்டுக்கு ஆகஸ்டு மாதம் 45 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நீரியல் தொடர்பான 4 மாநில புள்ளி விவரங்களும் பெறப்பட்டன. கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் மழை பெய்து வருவதாலும், அணைகள் நிரம்புவதாலும் தண்ணீர் பகிர்வு குறித்து கடுமையான விவாதங்கள் ஏற்படவில்லை. இதனால் கூட்டம் சுமுகமாக முடிந்தது.
கூட்டத்தின் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தலைமைச் செய லாளர் மணிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-– சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தொடர்ந்து வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினோம்.
அதை மேலாண்மை ஆணையம் நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம். இந்த ஜூலை மாதத்துக்கான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை தொடர்ந்து பெய்வதாலும், கர்நாடகத்தில் அணைகள் நிரம்பி விட்டதாலும் தண்ணீர் வருகிறது. தற்போதைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதுபோல வருங்காலத்திலும் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்று வலியுறுத்தினோம். ஆகஸ்டு மாதம் 45 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். அதனை சரியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். கர்நாடகம் இந்த கூட்டத்தில் எதிர்ப்பு ஒன்றும் சொல்லவில்லை. மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படவில்லை.
நீர்வரத்து பற்றி கண்காணிக்க வருகிற 30-ம் தேதி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தை நடத்த மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.