உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
டெல்லி, நவ. 12–
நாட்டிலேயே அதிக அளவாக, தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும் கேரளாவில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனிக்கழிப்பறைகள் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் அரசு-உதவிபெறும் பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் தலைவரும் சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த ஒன்றிய அரசு, நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட 97.5 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும், கேரளத்தில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளதுடன், வளரிளம் பருவ பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்கள் உள்ளிட்டவற்றை விநியோகிப்பதற்கான தேசிய கொள்கையை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன எனவும் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘ பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. அந்த கொள்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கடந்த நவம்பர் 2-ந்தேதி ஒப்புதல் அளித்தார்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.