செய்திகள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் கொள்முதல்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சிதம்பரம், செப்.30–

தமிழகத்தில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் கிளை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்காக குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு விழா, பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 49 பேருக்கு கருனை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் 14 பேருக்கு காலமுறை பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வரவேற்றார். தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ச.சி.சிவசங்கர், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை திறந்து பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசினர்.

விழாவில் அமைச்சர் ச.சி.சிவசங்கர் பேசுகையில் கூறியதாவது:–

கடந்த ஆண்டில் ரூ.1500 கோடியும், இந்த ஆண்டில் 2500 கோடியும் தொகை வழங்கப்படுகின்ற காரணத்தினால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான, மாத ஊதியத்தை முதல் தேதியில் வழங்கும் நிலை ஏற்பட்டது. அண்டைய மாநிலங்களில் 15 நாட்கள் மற்றும் 30 நாட்கள் கழித்து ஊதியம் பெறும் நிலை உள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், இருக்கின்ற நஷ்ட நிலைமையில் அதையெல்லாம் சரி செய்து முதல்வர் போக்குவரத்து துறையை பாதுகாத்து கொண்டிருக்கிறார்.

அதே போல் புதிய 2000 பேருந்துகள் வாங்குவதற்கான நிதியை ஒதுக்கி அதற்கான டெண்டர் விடப்பட்டு, இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிய பேருந்துகள் வரவுள்ளது. ஓட்டுநர், நடத்துநர்களின் மனக்குறை, பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பணிச்சுமை அதிகமாக உள்ளது என்ற குறையை போக்கும் வகையில் புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி அமர்த்துவற்கான ஆணை வழங்கி அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் கட்டமாக 685 பேர் நியமிப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு, 11200 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விழாவில் தொழிற்சங்கத் தலைவர் தங்க.ஆனந்தன், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கடலூர் கோட்ட பொதுமேலாளர் எஸ்.ராஜா நன்றி கூறினார். விழாவில் கிளை மேலாளர்கள் எஸ்.கிருஷணமூர்த்தி, வி.மணிவேல், உதவிப் பொறியாளர் ஆர்.பரிமளம், துணைமேலாளர் ரகுராமன், உதவிமேலாளர் சிவராமன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகர், ஏஆர்சி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர், புவனகிரி ஒன்றிய திமுக செயலாளர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *