செய்திகள்

தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை, ஜூன் 27–-

தமிழ்நாட்டில் நேற்று ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.

சீனாவில் கடந்த 2019–-ம் ஆண்டு கொடிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை பீதியில் உறைய வைத்தது. கொத்து கொத்தாக மனித உயிர்கள் பறிபோனது.

இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020–-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. கொரோனாவின் கோர பிடியில் பலர் சிக்கினார்கள். உயிர் பலி எண்ணிக்கையும் உயர்ந்தது.

முக கவசம் அணிதல், அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும் ஊரடங்கு உத்தரவு சில மாதங்கள் அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையிழப்பு, வாழ்வாதார இழப்பு போன்ற சங்கடமான சூழ்நிலையை மக்கள் எதிர்கொண்டனர். நாட்டின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.

இந்த நிலையில் கொரோனாவின் கொட்டத்தை அடக்குவதற்காக தடுப்பூசிகளை மருத்துவ வல்லுனர்கள் கண்டுபிடித்தனர். இதனால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. கொரோனா தொற்றின் விரீயமும் குறைந்தது. அதே நேரத்தில் கொரோனா தொற்று அவ்வப்போது உருமாறி மிரட்டவும் செய்தது.

கொரோனாவுக்கு தடுப்பூசிகள் பாதுகாப்பு அரணாக வந்த பின்னர் சாதாரண காய்ச்சல் நோய் போன்று ஆனது. தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தொற்று பாதிப்பு இரட்டை மற்றும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலே இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பரிசோதனை முடிவில் ஒருவர் கூட தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு மேலாக அலற வைத்து வந்த கொரோனா தொற்று தமிழ்நாட்டில் இருந்து விடைபெறுகிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒருவர் குணம் அடைந்தார். இதையடுத்து இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது. இதே போன்று வரும் நாட்களிலும் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றால், கொரோனா நோயாளிகளும், தொற்று பாதிப்பும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு வெகு விரைவில் உருவெடுக்கும்.

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நிலவரப்படி 6 கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 342 பேர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இதில் 21 லட்சத்து 4 ஆயிரத்து 71 ஆண்கள், 15 லட்சத்து 6 ஆயிரத்து 483 பெண்கள், 39 திருநங்கைகள் என 36 லட்சத்து 10 ஆயிரத்து 593 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 38 ஆயிரத்து 80 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *