செய்திகள்

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 961 ஆக உயர்வு: ஸ்டாலின் தகவல்

சென்னை, ஆக. 9–

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 961 ஆக உயந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் “ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு 2023” அறிக்கையை வெளியிட்டார்.

தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை 17.5.2023 முதல் 19.5.2023 வரை நடத்தியது. இக்கணக்கெடுப்பு, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள யானைகள் திட்ட இயக்குநரகத்தின் பரிந்துரையின் படி, யானைகளின் எண்ணிக்கையினை நேரடி மற்றும் மறைமுக முறைகளை பயன்படுத்தி கணக்கிடுவதையும், தமிழ்நாட்டின் 26 வனக்கோட்டங்களில் தொகுதி கணக்கிடுதல் முறை மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் நேரடியாக காணப்பட்ட யானைகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டு, யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்றது.

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2017–-ல் 2 ஆயிரத்து 761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் நான்கு பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சிமலை யானைகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையில், அதாவது 2 ஆயிரத்து 477 யானைகளை கொண்டுள்ளது.

உதகை முதுமலை மற்றும் மசினகுடி புலிகள் காப்பகத்தில் 790 யானைகளும், சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் புலிகள் காப்பகத்தில் 668 யானைகளும், திருப்பூர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 211 யானைகளும் உள்ளன.

கணக்கெடுப்பில்

2,099 பேர்

இக்கணக்கெடுப்பின் மூலம் ஆண் யானை மற்றும் பெண் யானை சதவிகிதம் 1 : 2.17 ஆக உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1855 யானைகளும் உள்ளன. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானைகளின் எண்ணிக்கையை விட மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் (12.5.2023 முதல் 16.5.2023 வரையில்) பல்வேறு யானை சரகங்களில் 1,731 துறைப்பணியாளர் மற்றும் 368 தன்னார்வலர்கள், என மொத்தம் 2099 பேர் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 3496 சதுர கி.மீ பரப்பளவிலான 690 பிளாக்குகளில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு 5 சதுர கி.மீ-க்கு கீழுள்ள பல சிறு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, 17.5.2023 அன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18.5.2023 அன்று யானை பிண்டம் கணக்கெடுப்பு மூலமும் 19.5.2023 அன்று 26 வனக்கோட்டங்களில் நீர்க்குமிழிகள் முறை மூலமும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேற்கண்ட கணக்கெடுப்பு முறையானது, டேராடூனில் உள்ள இந்திய வன விலங்குகள் நிறுவனம், மயிலாடுதுறை ஏ.என்.சி. கல்லூரி மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.

அகத்திய மலை

யானைகள் காப்பகம்

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள், குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் டி.வெங்கடேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *