செய்திகள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக தருமபுரியில் பலூன் திரையரங்கம்

Makkal Kural Official

சிறந்த ஒலி அமைப்புடன் 140 இருக்கைகள்

தருமபுரி, ஜூலை 6–

தமிழ்நாட்டில் முதல்முறையாக தர்மபுரியில் மிகப்பெரிய பலூன் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

பலூன் மாடர்ன் சினிமா தியேட்டர் என்ற பெயரில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி கிராமத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவரான ரமேஷ் என்பவர், தனது சொந்த ஊரில் இந்த பலூன் திரையரங்கத்தை நிறுவியுள்ளார்.

புதுமையான திரையரங்கத்தை அமைக்க வேண்டும் என்று ஆசையில் டெல்லியை சேர்ந்த பிக்சர் டைம் நிறுவனத்துடன் இணைந்து 50 சென்ட் நிலத்தில் இந்த திரையரங்கத்தை அவர் உருவாக்கியுள்ளார். கட்டுமானம் ஏதும் இல்லாமல் ராட்சத பலூன் மற்றும் கண்டெய்னர் மூலம் திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த ஒலி அமைப்பு

இங்கு மிகச்சிறந்த ஒலி அமைப்புடன் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன. திருமணம், பிறந்தநாள் விழாக்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் செயற்கை புல்வெளியுடன் அழகே பூங்காவும் வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பலூன் திரையரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஒரே வாரத்தில் மாற்றி விடலாம். தீ தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. 140 இருக்கைகளைக் கொண்ட இந்த பலூன் திரையரங்கில் கிராமப்புற திரையரங்குகளின் கட்டணமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பலூனுக்கு உள்ளே திரையரங்கம் இருக்கும் இந்த முறை, ஜெர்மன் நாட்டின் திரையிடல் முறையாகும். திரை அனுபவத்தை சிலிர்ப்பூட்ட காத்திருக்கும் இந்த பலூன் திரையரங்கம், ரசிகர்களின் மனதைக் கவரத் தவறாது என நம்பலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *