ரூ.1,000 கோடி நிவாரணம் வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல்
டெல்லி, டிச. 02–
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளதுடன், வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரி, கடலூரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக சேதங்களை சந்தித்து உள்ளன. கடந்த 2 நாட்களாக புயல் கரையை கடந்து வந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேற்கட்ட மாவட்டங்கள் தீவு போல் காட்சி அளிக்கின்றன. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
ரூ.1000 கோடி வேண்டும்
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து எம்பிக்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் நோட்டீஸ் வழங்கி உள்ளார். புயல் காரணமாக கனமழை பெய்து பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் மத்திய குழு ஆய்வு நடத்த வேண்டும் எனவும், அதுதொடர்பாக இன்று முதல் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் விஜய் வசந்த் எம்பி தனது நோட்டீசில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் வசந்த் எம்பி.,”தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். மாநிலத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைப்பதுடன், சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை மதிப்பிடுவதற்கு மத்திய குழுவை நியமிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே திமுக சார்பில் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகள் குறித்த விவாதிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கோரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.