செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை, மார்ச்.11-

தமிழகத்தில் நேற்று 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 41 ஆயிரத்து 908 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 62 ஆண்கள், 67 பெண்கள் என மொத்தம் 129 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 44 பேரும், கோவையில் 15 பேரும், செங்கல்பட்டில் 13 பேரும், நீலகிரியில் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், தேனி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை.

இதில் 12 வயதுக்கு உட்பட்ட 27 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 28 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 37 லட்சத்து 3 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 51 ஆயிரத்து 598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 290 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 119 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 55 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். சென்னை, கோவையில் தலா ஒருவர் உயிரிழந்தனர். 36 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 23 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 354 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 1,676 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.