செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று 2,079 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, ஜூலை.19-

தமிழ்நாட்டில் நேற்று 2,079 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட 128 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 42 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,202 ஆண்கள், 877 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 79 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 220 பேரும், தஞ்சாவூரில் 120 பேரும், ஈரோட்டில் 128 பேரும், சேலத்தில் 142 பேரும், சென்னையில் 150 பேரும், திருப்பூரில் 121 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 வயதுக்குட்பட்ட 128 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 282 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் குழந்தைகள் பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 46 லட்சத்து 95 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 25 லட்சத்து 35 ஆயிரத்து 402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 19 பேரும், தனியார் மருத்துவமனையில் 10 பேரும் என 29 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். நேற்று 21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 724 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,743 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 24 லட்சத்து 73 ஆயிரத்து 781 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 27 ஆயிரத்து 897 பேர் உள்ளனர். தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 828 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 32 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 492 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 352 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *