செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று 1,608 பேருக்கு கொரோனா

சென்னை, செப்.13-

தமிழ்நாட்டில் நேற்று 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 929 ஆண்கள், 679 பெண்கள் என மொத்தம் 1,608 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 212 பேரும், சென்னையில் 197 பேரும், ஈரோட்டில் 160 பேரும், செங்கல்பட்டில் 113 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் ஒருவர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்.

மாநிலத்தில் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 259 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 33 லட்சத்து 22 ஆயிரத்து 131 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 26 லட்சத்து 33 ஆயிரத்து 839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 22 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 168 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,512 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து 82 ஆயிரத்து 198 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 473 பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று 41 ஆயிரத்து 545 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 241 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 278 ஐ.சி.யூ. படுக்கைகள் என மொத்தம் 74 ஆயிரத்து 64 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *