செய்திகள்

தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா: 1,657 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

சென்னை, செப்.28-

தமிழ்நாட்டில் நேற்று 1,657 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 23-ந்தேதி கொரோனா பாதிப்பு 1,745 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து நாள் ஒன்றுக்கு பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் 4-வது நாளான நேற்றும் பாதிப்பு குறைந்தது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 965 ஆண்கள், 692 பெண்கள் என மொத்தம் 1,657 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக கோவையில் 189 பேரும், சென்னையில் 186 பேரும், ஈரோட்டில் 117 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தபட்சமாக பெரம்பலூர், தென்காசியில் தலா 5 பேரும், ராமநாதபுரத்தில் 7 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 26 லட்சத்து 58 ஆயிரத்து 923 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 99 ஆயிரத்து 365 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 83 ஆயிரத்து 965 முதியவர்களும் இடம் பெற்று உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 19 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 509 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று 41 ஆயிரத்து 466 ஆக்சிஜன் படுக்கைகள், 25 ஆயிரத்து 403 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 295 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 75 ஆயிரத்து 164 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து 1,662 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 26 லட்சத்து 6 ஆயிரத்து 153 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 17 ஆயிரத்து 261 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *