செய்திகள்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை

Makkal Kural Official

1000 மலிவு விலை மருந்தகங்கள் ஜனவரியில் தொடங்க நடவடிக்கை

கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை, ஆக. 30–

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று கூறிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜனவரியில் 1000 மலிவு விலை மருந்தகங்கள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு (Monkey Pox) நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:–

“ஆகஸ்ட் 14ஆம் தேதி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ள பொது மருத்துவ அவசர அறிவிப்பில், குரங்கு அம்மை நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய இந்த பாதிப்பு உலகம் முழுவதும் தற்போது 123 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் குரங்கம்மை நோய் பாதிப்பு குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.

தொடர் கண்காணிப்பு

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணித்து அவர்களுக்கு குரங்கம்மை பாதிப்புக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் இதற்கென தனி வார்டு உருவாக்கப்பட்டு அதில் மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்தோடு, அனைத்து இடங்களிலும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களிலும் கப்பல் வழியே வரும் பயணிகளுக்கு குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குரங்கம்மைக்கு வார்டுகள்

இதுகுறித்து விமான நிலையங்களில் குரங்கமை நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டு நோய்க்கான அறிகுறிகள் குறித்து பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எடுத்துரைக்கப்படுகிறது. குரங்கம்மை நோய் பாதிப்பு என்பது தொற்றுநோய் என்பதால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் இதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளா உட்பட இந்தியாவில் இதுவரை குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை. இருந்தாலும் தமிழ்நாடு கேரள எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பினை செய்து வருகிறோம் என்றார்.

ஜனவரியில் மலிவுவிலை மருந்தகம்

தொடர்ந்து, மாநில அரசின் மலிவு விலை மருந்தகங்கள் குறித்த கேள்விக்கு,”முதலமைச்சர் மருந்தகத் திட்டம் வரும் பொங்கல் தினத்தன்று தொடங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இதில் மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். எந்தெந்த இடங்களில் இந்த மருந்தகங்களை அமைக்கலாம், என்னென்ன மருந்துகள் அடிப்படையாக தேவைப்படுகிறது என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒன்றிய அரசு இதேபோல் மலிவு விலை மருந்தகங்களை நடத்தி வருகிறது. இவை மக்கள் மருந்துக்காக செலவிடும் கட்டணம் கட்டாயம் குறைக்க உதவும் என்றார்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு,”மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்களில் கூட சில மணி நேரங்களில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டுள்ளது என தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *