செய்திகள்

தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை 320 ஆக அதிகரிப்பு –

சென்னை, ஜன.25–

அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற தமிழ்நாடு வனத்துறையின் இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் கழுகுகள் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25–ந் தேதி மற்றும் 26–ந் தேதி ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு மூலம் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 246 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகு கணக்கெடுப்பு டிசம்பர் 30–ந் தேதி மற்றும் 31–ந் தேதி ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த முறை பில்லிகிரி ரங்கநாத சுவாமி கோவில் புலிகள் காப்பகம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பில் இடம் பெற்றது.

வாண்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறை பின்பற்றப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 139 வான்டேஜ் பாயின்ட்களில் நான்கு அமர்வுகளாக இரண்டு நாட்களில் 8 மணிநேரம், அனைத்து 139 வான்டேஜ் புள்ளிகளிலும் நடத்தப்பட்டது. கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 320 என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெண்ணிறக்கழுகு, நீண்டபில்ட் கழுகு, சிவப்பு தலை கழுகு, எகிப்தியன் கழுகு, இமாலயன் கழுகு என மொத்தம் 320 கழுகுகள் ஆகும். தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பாதுகாப்பதற்காக முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தலைமை வனஉயிரினக் காப்பாளர் தலைமையில் மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளது.

மேலும், கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கால்நடை சிகிச்சைக்காக விற்கப்படும் டிக்ளோஃபெனாக் மருந்து விற்பனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மூலம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலமுறை மருந்து கட்டுப்பாட்டு துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்தை விற்பனை செய்ததற்கு 104 உற்பத்தியாளர்கள், மல்டி டோஸ் டிக்ளோஃபெனாக் விற்பனையாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாஸ் ரெட்டி

கடந்த 2023–ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு குழுவில், தலைமை வனஉயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, முதுமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் அருண்குமார் ஆகியோர் இந்த கணக்கெடுப்பை முன்நின்று நடத்தினர்.

மேலும், இந்த கணக்கெடுப்பு குழுவில் மாநில வனஉயிரின வாரிய உறுப்பினர்கள், மாநில அளவிலான கழுகு பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், என்ஜிஓக்கள் மற்றும் பறவை நிபுணர்கள், கழுகுகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரமான பறவை ஆர்வலர்கள் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *