டெல்லி, பிப். 04–
தமிழ்நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 6,872 பேர் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 8,534 ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் சத்திய பால் சிங் பகேல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் கருப்பைவாய்ப் புற்றுநோயின் பாதிப்பு விவரம், நோய்ப் பரவலில் பிராந்திய வேறுபாடுகள், அவற்றின் காரணங்கள், நோயை கண்டறிய பரிசோதனைக் கருவிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு இணையமைச்சர் சத்திய பால் சிங் பகேல் பதிலளித்தார். அவர் கூறியதாவது,
‘ஐசிஎம்ஆர்-ன் தேசிய புற்றுநோய் பதிவேடு திட்டத்தின் (என்சிஆர்பி)படி, 2023-ம் ஆண்டில் 3,42,333 பெண்கள் கருப்பைவாய் புற்றுநோயின் பாதிப்பில் உள்ளனர். இதில் 45,682 பேர் உத்தர பிரதேசத்திலும், 36014 பேர் தமிழ்நாட்டிலும், 30414 பேர் மகாராஷ்டிராவிலும், 25822 பேர் மேற்கு வங்காளத்திலும், 23164 பேர் பீகார் மாநிலத்திலும் என அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாசல் மாவட்டம்
கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 6,872 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரித்து 2023-ம் ஆண்டில் 8,534 ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது. மாவட்ட வாரிய கணக்கிடும் போது அதிகபட்சம் அருணாசலப் பிரதேசம் பாப்பும்பரே மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கு 27 பேரும், சென்னையில் 14 பேரும் கணக்கிடப்பட்டுள்ளது.
தொற்றாத நோய்களை முன்னறிதல், தடுத்தல், பரிசோதனை, சிகிச்சை ஆகியவைக்கான உள்கட்டமைப்பு, மனித வளம், சுகாதார மேம்பாடு, விழிப்புணர்வு போன்ற சுகாதார வசதிகளை பரிந்துரைப்பதில் இந்த திட்டத்தின் மூலம் கவனம் செலுத்தப்படுகிறது. தொற்றா நோய்களுக்கு 753 மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், இந்த நோய்களுக்கான 6,237 சமூக சுகாதார மையங்களும் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திரின் என்கிற முன்முயற்சியின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கருப்பை வாய்ப் புற்று, மார்பகம், வாய்வழி போன்ற புற்றுநோய்க்கான பரிசோதனைக்கு இலக்கிடப்பட்டுள்ளது என அமைச்சர் சத்திய பால் சிங் பகேல் தெரிவித்தார்.