செய்திகள்

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 5 வாரங்களில் 27 மடங்கு உயர்வு

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி

சென்னை, நவ. 20–

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த 5 வாரங்களிலேயே, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 27 மடங்கு அதிகரித்துள்ளது.

‘இறக்கும் முன்னதாக உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அவரது அறிவிப்பு வெளியாகும் வரை மாதத்திற்கே 100 பேர்தான் உடல் உறுப்பு தானம் செய்து வந்துள்ளனர். அரசு மரியாதை என்றதும் மக்கள் முண்டி அடித்துக் கொண்டு முன் வந்துள்ளனர் என்று அண்மையில் வெளியான அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலும் இறந்தவர்களின் உடல் உறுப்புகளைக்கூட தானம் செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருக்க, மதரீதியான நம்பிக்கைகளே பிரதான காரணமாக இருந்துள்ளது. அந்த நம்பிக்கையில் ஓர் அறிவியல் பார்வையை மக்கள் இப்போது செலுத்த ஆரம்பித்துவிட்டனர் என்று இந்த துறையில் அனுபவம் பெற்ற டாக்டர் அமலோற்பவநாதன் கூறி இருக்கிறார். இது குறித்து மேலும் அவர் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடுதான் முன்னோடி

“இந்தியாவிலேயே உறுப்பு மாற்றுத் திட்டம் என்பது தமிழ்நாட்டில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமை நம் மாநிலத்தையே சேரும். 2008 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியால்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் உறுப்பு தானம் என்பது பற்றிப் பரவலாக விழிப்புணர்வே இல்லை. அப்படியான ஒரு காலகட்டத்தில் இதை யோசித்துச் செயல்படுத்தியவர் மு.கருணாநிதி.

அன்றைக்கு நான் தான் அந்தத் திட்டத்தினை ஆரம்பித்தேன். முதன்முதலாக ஸ்டான்லி மருத்துவமனையில் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தோம். அப்போது 12 மணிநேரம் அந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. ஆனால், இப்போது 6 மணி நேரத்தில் அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்துவிடக் கூடிய அளவுக்கு நவீன உபகரணங்கள் வந்துவிட்டன. இந்தத் திட்டம் தொடங்கிய முதல் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வரை உறுப்பு தானத் திட்டத்தில் முதல் இடத்தை தமிழ்நாடுதான் வகித்துள்ளது.

கடந்த கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டுகள் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. ஒரு ஆண்டில் 5 அல்லது ஆறு பேர்தான் செய்துள்ளனர். ஆகவே முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை ஒரு மருத்துவராக நான் மனதார வரவேற்கிறேன். கட்டாயம் இது ஒரு முன்மாதிரியான அறிவிப்பு மட்டுமல்ல; முற்போக்கான மற்றும் புரட்சிகரமான அறிவிப்பும்கூட. இந்தியாவில் பிற மாநிலங்களில் இப்படி யாரும் அறிவிக்கவில்லை.

இன்னும் அழுத்திச் சொன்னால், உலக அளவில்கூட வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில்கூட இப்படி ஒரு திட்டம் நான் அறிந்தவரை அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒரு செய்தியை நான் இதுவரை கேள்விப்படவும் இல்லை. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்தான் முன்னோடியாகத் திகழ்கிறார்.

அரசின் உயர்ந்த மரியாதை

அரசின் உயர்ந்த மரியாதை எது? இறுதி அஞ்சலியில் அரசு மரியாதை செலுத்துவதுதானே? இந்த மரியாதை சமூகத்தில் உயர்ந்த இடத்திலிருந்தவர்களுக்கு இதுவரைக் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு அவர்களின் சேவையை மதித்து அரசு மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தவிர அமைச்சர், முதலமைச்சர், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய பதவிகளை அலங்கரித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆனால், ஒன்றுமே இல்லாத ஒரு சாதாரண குடிமகன், தனது உடல் உறுப்பை தானம் செய்யும்போது அவர்களுக்கு இணையான மரியாதை வழங்கப்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய மரியாதை? அதை ஸ்டாலின் உருவாக்கிக் கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு வெளியான பிறகு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முன்பு மாதத்திற்கு சுமார் 200 பேர் தானம் செய்ய முன்வருவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்குப் பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குத் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைதான் காரணம். இந்தளவுக்கு மக்கள் முன்வர முதலமைச்சரே இதை அறிவித்ததுதான் காரணம் என்று கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *