அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
ஆலந்தூர், ஜூலை2-
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் சென்ற 10 பேர் வெயில் கொடுமையால் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக புனித ஹஜ் பயணம் உள்ளது. துல் ஹஜ் மாதத்தில் இந்த கடமையை நிறைவேற்ற முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள்.
இந்நிலையில் புனித ஹஜ் பயணம் சென்ற 170 பெண்கள் உள்பட 326 பேர் நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலைத்துக்கு வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ., ஹஜ் கமிட்டி செயலாளர் ஏம்.ஏ.சித்திக் உள்பட பலர் வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புனித ஹஜ் பயணத்திற்காக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்து 801 பேர் சென்றனர். ஹஜ் பயணத்தை முடித்து விமானத்தில் வந்த 326 பேரை முதலமைச்சர் சார்பில் வரவேற்று உள்ளோம். புனித ஹஜ் பயணத்தின்போது வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
மேலும் மக்காவிலிருந்து மதினாவிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் இழப்பை தவிர்க்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.